Pages

Wednesday, November 18, 2015

ஓவச்செய்தி


பேரமைதியாய் அந்த பஸ் நகர்ந்து கொண்டிருந்தது. வானளாவிய மரங்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்றிருந்தது. மரங்களின் பெயர் இன்னதென்று தெரியவில்லை, முன்பின் அறியாத மரமாய் இருந்தது. தீர்த்தமாய் சில துளிகளை மட்டும் மேகம் தெளித்தது. அதைப் பார்க்க மரத்தின் நுனி மேகத்துக்குள் நுழைந்து, தீர்த்தத்தை தெளிக்க வைத்தது போல இருந்தது. காற்று தன்னை தூய்மையாக்கி, பின் எங்களைத் தழுவி மாசுற்று, திரும்பவும் தன்னை தொடர்ந்து தூய்மையாக்கிக் கொண்டிருந்தது. என்றாலும் எங்கள் மாசு குறையாவுமில்லை, நாங்கள் மாறவுமில்லை.
நீ ஏன் வந்த? கோபமாய் அந்த பெண் நீல நிற சட்டை அணிந்தவனிடம்  கேட்டாள்.
இரண்டு சீட்டுக்கு பின்னால் எப்படா பேசுவாள் என்று காத்துருந்தவனுக்கு சந்தோஷம். நீயே போனதுக்கு அப்புறம் நா மட்டும் இருந்து என்ன பன்னப்போறன்? அதான் வந்துட்டன், மகிழ்ச்சியாய் பதிலுரைத்தான்.
வாளைப் போல நான்கு முடிமட்டும் நெற்றியிலிருந்து கயல்விழிக் கருமணியை மறைத்து, அவள் கூரான மூக்கின் மேல் வாள் சண்டையிட்டது. அந்த முடியின் முனையில் நீல நிற சட்டை அணிந்த பையனின் மனதை கட்டிக்கொண்டு, காற்றுக்கு அது ஊசல்குண்டைப் போல ஆடியது.
முறைத்தால் அவன் உறையடலுக்கு பதிலாய்.
பஸ் கீரிச்சிடும் சத்தம், நிற்க்கப்போகிறது என்பதைச் சொன்னது. அவர்கள் உரையாடல் அதோடு நின்றுவிட்டது.
“நான் வர மாண்டன். என்னைய விடுங்க. சொல்றன் இல்ல வர மாண்டன்னா”. எழுபது வயதிருக்கும் ஒரு பெரியவர் அடம்பிடித்தார். என்னடா இவர் சின்னப் பிள்ளை மாதிரி பண்றார் என மனதுக்குள் தோன்ற வைத்தது. அதற்க்குள் நான்கைந்து பேர் அவரை பஸ்ஸில் வழுக் கட்டாயமாக ஏற்றிவிட்டார்கள். அதுவரை பெரிதாக சத்தம் போட்டவர், மேலே ஏறியதும் அமைதியானர். பஸ் வழக்கம் போல நகர ஆரம்பித்தது.
வெள்ளை நிறத்தில் வேட்டியும், சட்டையும் ஒரு காலத்தில் அணிந்திருப்பார் போல, இப்போது அது செக்க செவேலென்றிருந்தது. பரட்டைத் தலை, தாடி மண்டிப்போன முகமாயிருந்தது. அவர் மூன்றாவது சீட்டில் அமர்ந்ததும், நவ நாகரிக இளைஞன் அந்த சீட்டிலிருந்து எழுந்துகொண்டான். அந்தப் பெரியவர் நாகரிகமற்றவர், நாத்தமடிப்பவர், தன் பக்கத்தில் உட்கார தகுதியில்லாத காட்டுமிராண்டி என்று இளைஞனின் நிழல் என் இடப்புறம் ஜன்னலிலும், அவன் என் வலப்புறச் சீட்டிலும் உட்காரும் போது முனுமுனுத்து அமர்ந்தான். அவன் திரும்பி அவரை ஏற, இறங்கப் பார்த்தான். பிறகு சட்டென தன் முகத்தை திருப்பிக்கொண்டான். அவர் தான் எதுவும் அவமானப்பட்டதாய் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் பஸ்சிலிருந்த அனைவரும் அப்படித்தான் பார்த்தார்கள், என்னை உட்ப்பட. தன் இரு கரங்களையும் சீட்டின் கம்பிகளைப் இருகப்பிடித்து, கண்களை மூடினார். நானும் தலையை திருப்பி, பஸ்சுக்கு வெளியே பார்க்க முயன்றேன்.
உயரமாய் வளர்ந்த மரங்களை இங்கு காணவில்லை. இடுப்பு உயரத்திற்க்கு மட்டும் பச்சைப்பசேலேன்று, வேலியைப் போல செடிகள் வளர்ந்திருந்தது. திருஹ்டிப் பொட்டு வைப்பதைப் போல மலர்கள் அந்த செடியின் மேல் மலர்ந்திருந்தது. இருந்த மேகங்களை எல்லாம் விழுங்கிவிட்டு இன்னும் பசி தீராமல், பார்ப்பதைப் போல இருந்தது அந்த நீல நிற வானம். அவனை பார்க்க விரும்பாமலும், ஆனால் அவன் என்ன செய்கிறான் என தெரிந்துகொள்ள விரும்பியும், அவனது நிழலுருவத்தை கவனித்தேன். அவனது நிழலுருவம் தலை சீவியது, சட்டென மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்தது.

பஸ் மலையின் மேல் போவதைப் போல உண்ர்ந்தேன். மரங்கள், மேகங்கள், சந்திரன், சூரியன், காற்று, மண் எவற்றையும் காண முடியவில்லை. பால் நிறமாய், கண்களை கூசச் செய்யும் ஒளியுடனிருந்தது. வெற்றிடத்தில் வெள்ளை நிறத்தை அடித்தது போலிருந்தது காட்சி. என்னைப் போலவே எல்லோரும் பஸ் ஜன்னலின் ஊடே ஆர்வமாய்ப் பார்த்தனர். பஸ் தன் இயக்கங்கள் அனைத்தையையும் சட்டென நிறுத்திக்கொண்டது. துடுக்கான அந்தச் சிறுவன் ஒடிப்போய் படிகளில் நின்றுகொண்டு, தன் கால்களில் ஒன்றை மட்டும் நீட்டினான். பிறகு ஊன்றிப்பார்த்தான், நிற்க்க முடிந்தது. எல்லோரும் மற்றவரை மாறிமாறிப் பார்த்துக்கொண்டனர். பிறகு அந்த சிறுவனைத் தொடர்ந்து எல்லோரும் இறங்கியிருந்தனர். பஸ் அந்தரத்தில் நின்றிருந்தது, நாங்களும்.
அதுவரை ஆச்சரியமாக இருந்த எங்களுக்கு இப்போது பயம் தொற்றிக்கொண்டது. என்னடா இது, இப்படி மாட்டிக்கிட்டோமே? என்பது போல் இருந்தது ஒவ்வோருவரின் பார்வையும்.
“வாருங்கள்” ஓர் அழகான தேவதை எங்களை அழைத்தது. திவ்வியமான முகம், முதுகில் இரண்டு இறக்கை. அந்த இறக்கை அதனுடைய தலையை தட்டுமளவு இருந்தது.
நாங்க எங்க வந்துருக்கிறோம்? இது என்ன இடம்? என்றான் அந்த துடிப்பான சிறுவன், தேவதையைப் பார்த்து. மற்ற அனைவரும் திகிலான பார்வையை மட்டும் தேவதையைப் பார்த்து வீசினோம்.
புன்னகை பூத்த முகத்தோடு பதில் தந்தது. “சொர்க்கத்தில்”.
அப்ப நா செத்துட்டனா? என்று ஒரு சேர கேட்டனர், பஸ்ஸில் வந்த இரண்டு பேரைத்தவிர. ஒருவர் அந்தப் பெரியவர், இன்னோருவர் காவி வேட்டியனிந்த சாமியார்.
எல்லோரைவிடவும் அந்த இளைஞன் பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருந்தான்.
“வரிசையில் நின்றுகொள்ளவும்” தேவதை அன்புக் கட்டளையிட்டது.  
அடிபணிந்த எல்லோரும், வரிசைகட்டி நின்றோம். எனக்கு முன்னால் அந்த இளைஞன், அதற்க்கு முன்னால் சாமியார், அதற்க்கும் முன்னால் பெரியவர்.
அந்த தேவதை சட்டென காணாமல் போனது. நாங்கள் மட்டும் வரிசையில் நின்றோம். கண்டிப்பாக பூமியாய் இருந்தால் நின்றிருக்க மாண்டோம். இங்கு வேறு வழியில்லை. ஒவ்வொரு நிமிடமும் என்ன ஆகுமோ என்று பயப்பட்டுக்கொண்டே நிற்க்கவேண்டியிருந்தது.
“சந்திர குப்தன் வருகிறார்” என்று ஒரு அசரீரீ நாற்ப்பது முறை அறிவித்தது. கிட்டத்தட்ட எல்லோரும், கனமாக எச்சிலை விழுங்கினர்.
தலையில் வட்டக் குல்லா, வெள்ளை நிறத்தில் சட்டையும், வேட்டியும் கட்டியிருந்தார். கண்கள் தெளிவாகவும், கருணை கொண்டதாகவும் இருந்தது. சந்திர குப்தன் வரிசையின் முன் தோன்றினார். அவருடன் மூன்று தேவதைகளும் வந்திருந்தனர். அவர்கள் பார்க்க பூமியில் வாழும் அழகான பெண்களைப் போல இருந்தனர்.
அவர் ஒவ்வொருவராய், கேட்டும், பதிலுரைத்தும், பின் யாராவதொரு தேவதையின் பக்கம் அனுப்பினார். எங்கள் வரிசை வெகு நேரமாய் நகர்ந்தது. ஒருவழியாய், அந்தப் பெரியவரும், சாமியாரும் வெவ்வெரு வரிசையில் நின்றனர்.
இது என்ன மூன்று வரிசை? இளைஞன் சந்திர குப்தனைப் பார்த்துக் கேட்டான். அவர் பொறுமையாக எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னதால்தான் இவ்வளவு நேரமானது என்று புரிந்தது. அவன் பேசுவதும், அவர் பதிலளிப்பதும் எனக்கு தெளிவாகக் கேட்டது மற்ற எல்லோரையும் விட.
 அவர் கேள்விக்கு பதிலளிக்க தாயாரானார். இதோ இந்த வரிசை வீடுபேரு அடைந்தவர்களுக்கு என்று சாமியார் நின்றிருந்த வரிசையைக் காட்டினார். இதோ இந்த வரிசை சொர்க்கத்தை அடைந்தவர்களுக்கானது என்று பெரியவர் நின்றிருந்த வரிசையைக் காட்டினார். இது நரகத்திற்க்கானவர்களுக்கு, மீண்டும் பிறப்பு-இறப்பு எனும் வரிசையில் மாட்டிக்கொண்டவடர்களுக்கு என்று கடைசி வரிசையைக் காட்டினார்.
சற்று நேரம் நிலவிய அமைதியை உடைத்து அந்த இளைஞனே வினவினான். நான் எந்த வரிசையில் நிற்க்கட்டும்?
சற்றும் யோசிக்காமல், நரகவரிசையைக் காட்டினார் சந்திர குப்தர். நான் நடுங்கிப்போனேன்.
நா ஏன் அந்த வரிசைக்கு போகனும்? அவங்க இரண்டு பேரையைவிடவும் நல்லா படிச்சுருக்கன். அவங்க இரண்டு பேரைவிட எல்லா தெரிஞ்சவன் நான் தா. நீங்க எத வச்சு இப்படி பிரிக்கறீங்க?
அவங்க என்ன பண்ணீணாங்க அப்படி? அழுக்கு துணியும் அவங்களும். பொரிந்து தள்ளிவிட்டான் இளைஞன்.
பதிலுக்கு அவர் கோபப்படவில்லை. சிரித்தார். அவனுக்கு எரிச்சலைத்தான் தந்தது அவர் சிரிப்பு. தன் சாந்த முகம் மாறாமல் பேசத்தொடங்கினார்.
உனக்கு என்ன தெரியும் அப்படி?
நான் படிச்சிருக்கன் என்று தன் டிகிரியை சுட்டிக்காட்டமுயன்றான்.
ஓஓ.. அப்படியா? நாட்டில மதப்பிரச்சனை வர்ரதே. உங்க கருத்தேன்ன?
அது தப்பு. பண்ணக்கூடாது என்றான் இளைஞன்.
அவ்வளவுதானா உங்க கருத்து. படிச்சவர்ன்னு சொன்னிங்க. ம்.. சொல்லுங்க என்றார் சந்திர குப்தர்.

அப்புறம் சொல்ல என்ன இருக்கு? பதிலுக்கு வினவினான்.
படிச்சவன்னு சொன்னீங்க. உலகத்தில நடக்குற பெரிய பிரச்சனையப் பத்தி ஒரு வார்த்தைக்கு மேல பேச முடியல. கேவலமான புன்னகை பூத்தார்.
அப்ப இவங்க இரண்டு பேருக்கும் எல்லாம் தெரிஞ்சுதா சொர்க்கத்திற்க்கும், வீடுபேரும் போறாங்களா? முகத்தை அஸ்டகோணலாக வைத்துக்குகொண்டு கேட்டான் இளைஞன்.
உனக்கு எதுவும் தெரியவாய்ப்பில்லை. காரணம் நீ படிச்சவன். போட்டுக்க ஜீன்ஸ் பேண்டும், பிரண்டேட் சர்ட்டும் இருந்தால் போதும். வெளியில மட்டும் அழகா வச்சுக்கிட்ட, உள்ள எல்லாம் குப்பை, ஒரே நாற்றம் என்றார் அவர்.
ஓ! அப்ப அவங்க என்ன பெரிசா பண்ணீட்டாங்கன்னு நீங்க நினைக்கீறிங்க?
மாறாத சிரிப்பு எப்போதும் அவருடனே இருந்தது. ஏய் இளைஞா! கேள். நன்றாக கேள். ஒருவன் சொர்க்கம் போகவும், நரகம் போகவும் அவனவன் கர்ம்மாதான் காரணம், கர்மா என்றால் அவன் ஆற்றும் கடைமை.
இளைஞனை ஒருமுறை நன்றாக உற்றுப்பார்த்துவிட்டு தொடர்ந்தார். எவன் ஒருவன் தான் செய்யும் கடைமையில் பிரதிபலன் பாராமலும், பற்றற்றும் அதனை ஆற்றுகிறானோ, அவனே சொர்க்கம் செல்ல தகுதியுடையவன் ஆகிறான்.
 இதோ பார்க்கிறாயே இந்தப் பெரியவர், இவரோரு விவசாயி. இவர் தன்நலம் பாராமல் உழைத்தார், அதான் அவருக்கு கிட்டியிருக்கிறது. சொல்லி முடிக்கும் முன்பு, இளைஞன் சாமியாரைப் பார்த்தான்.
மேலும் கேள்! இவர் என்று சாமியாரைச் சுட்டிக் காட்டி பேசத் ஆரம்பித்தார். இறப்பும்-பிறப்பும் அற்ற நிலையை அடைந்திருக்கிறார். காரணம் சம்சாரியத்திலிருந்து வெளியேறி, பரப்பொருளைக் கண்டுகொண்டார். இந்த உலகத்தில் உள்ளதனைத்தும் மாயை, புலங்களைக்கொண்டு அதை அனுபவிப்பது சிற்றின்பம். ஆனால் பேரின்பம் அவனின்றி யாருமில்லை என்று உணர்ந்தார். அதான் அவர் வீடுபேறு பேற்றார்.
இளைஞனுக்கு அப்போதுதான் விளங்கிற்று தான் பூமியில் செய்த காரியங்கள் அனைத்தும் தன்னை மட்டும் கருதியது. அகங்காரம், குரோதம், காமம். உண்மையில் தன் செயலுக்காக வெட்க்கப்பட்டான்.
தான் கற்றது ஒரு கல்வியேயில்லை. எது நன்மை, தீமை என்று தீர்மானிக்க தெரியவில்லை. உலகத்தைப் பற்றிய அறிவில்லை. வெளிப்புற அழகை ஆராதித்த எனக்கு, உட்புறமுள்ள விசயங்கள் தெளியுறவில்லை. எல்லாம் குப்பையாக இருக்கிறது. உண்மையில் நாற்றமடிக்கிறது, புலம்பியவாறு நரகவரிசையில் தானேபோய் நின்றான் இளைஞன்.
அடுத்தது நான். பின்னால் உள்ளவர்கள் நான் நகரும் முன்பே ஆர்வத்தால் என்னை சந்திர குப்தர் முன் நிறுத்தினர்.
ஏதேனும் கேள்வி உள்ளதா என்று அவர் வினவினார்.
நீங்கள் அழிவற்றவறா? என்றேன்.
எல்லாமே அழியக்கூடியாது. தோற்றமென்று இருந்தால் அழிவு என்பது நிச்சயமானது, அந்த பரம்பொருளைத்தவிர. அவர் ஆதியும், அந்தமும் இல்லாதவர், காலமற்றவர். நான் எல்லாவற்றிற்க்கும் கட்டுப்பட்டவன் ஆவேன் என்றார்.
நான்.. என்று இழுத்ததும் அவர் வாய்விட்டு சிரித்தேவிட்டார் என் பயத்தைக் கண்டு.
எப்படியும் எனக்கு வீடுபேறு வரிசையில்லை. மனம் திகிலடைந்திருந்தது.
அவர் தன் முடிவைச் சொல்ல வாயேடுத்தார். ஆனால் அவர் சொல்லுவது இன்னதேன்று கேட்க்க முடியவில்லை. காதுகளைத் தீட்டி முயன்றுபார்த்தேன். ம்கூம்.. கேட்க்கவேயில்லை.
என்னது திரும்பவும் பஸ் சத்தம் கேட்கிறதே என்று ஆச்சரியப்பட்டேன். அவரது குரல் மங்கி, பஸ்ஸின் சத்தம் நன்றாகக் கேட்டது. பஸ்ஸின் கீரிச்சிடும் சத்தமும் அதைத் தொடர்ந்து கேட்டது. நின்றது பஸ். நீல நிற சட்டைக்காரன் இன்னமும் அந்தப் பெண்ணோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தான். வயதான ஒரு பெரியவரை நான்கு, ஐந்து பேர் பஸ்ஸில் ஏற்றிவிட்டனர். அவர் மெதுவாக என் பக்கத்தில் வந்தமர்ந்தார். ஏற்க்கனவே நான் பார்த்த அதே உடையில்தான் இருந்தார். அப்போதுதான் என்னை கவனித்தேன். அந்த இளைஞனுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருந்தது. அப்படியே எனக்கு தூக்கிவாரிப்போட்டது போல இருந்தது. செய்வதறியாமல் தவித்தேன். மனம் மிக்க குழப்பத்திலிருந்தது. பஸ் நகரத்துவங்கியது.
என் கவனத்தை வெளியே செலுத்த முயன்றேன். டூவிலர்கள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு சென்றது. நிறைப்பேர் நடந்துவந்தனர். சரக்கென ஒரு ஆட்டோ என் பார்வைக்கு இடையில் புகுந்தது.
“உன் வாழ்க்கை உன் கையில்” என்று கருப்பு நிறத்தில் கொட்டை எழுத்தில் ஆட்டோ பின்னாடி போட்டிருந்தது. மனம் சஞ்சலப்பட்டது அதைப் பார்த்ததும் நின்றுகொண்டது. அதன் உண்மையான் அர்த்தம் எனக்கு அப்போதுதான் விளங்கிற்று.


No comments:

Post a Comment