பிச்சைப் பாத்திரம்
குறிப்பு: மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய மத்தவிலாச பிரகசனம் என்னும் அங்கத நாடகத்தை தழுவி எழுதப்பட்ட சிறுகதையிது. எழுத்தாளன் என்ற முறையில் கதையில் மாற்றதையும் செய்துள்ளேன். அதற்க்கான உரிமையுள்ளது என நான் நினைக்கிறேன்
நன்றாக சாப்பிடவும், சுவையும் மணமும் மிக்க பாணங்களை அருந்தவும், ஐந்து வகை தாம்பூலங்களை தரிக்கவும் புத்தர் அனுமதி அளித்தார். அவர் அனுமதி அளித்து என்ன பயன்? யார் அதை கொடுப்பார்கள்? நான் புத்த பிக்கு. பிச்சை எடுத்தால் இடவேண்டும். அந்த தர்மம் எல்லாம் இங்கே நடைமுறையில் இல்லை. மன்னன் தான் எல்லாவற்றையும் மறந்து எங்களைக் கைவிட்டான். இந்த மக்களுமா? சைவர்கள் பின்னால் ஓடிவிடுகிறார்கள். காஞ்சி மா நகரம் இப்படி பைத்தியகாரர்களின் தலை நகரமாகும் என ஆகுமேன போதி தர்மர் அறிந்திருப்பாரா?
மனதுமுட்ட மதுவருந்து கருவிழியாள் கண் சொக்கி நிற்ப்பதுதானே வீடுபேற்றுக்கு வழி என ஏகாம்பரத்தில் வசிக்கும் கபாலிகன் தேவசோமன் சொல்லியவாறே தனது மனைவியை போதையால் கட்டிக்கொண்டு நடந்தான்.
இந்தக் காஞ்சியில் நான் யாரைத் தான் குறைபட்டுக்கொள்ள முடியும்? வழி நிறைக்கும் பூக்கடைகள். வான் நிறைந்த கோபுரங்கள், மகளிரின் காமம் கிளப்பும் சிலம்பொலி. இந்த வாழ்க்கையில் தான் என்ன? சுகமில்லை, மகிழ்ச்சியில்லை. என்னேரமும் மது பற்றியும் மாது பற்றியும் வரும் எண்ணங்களை அடக்கி வைத்து அது சீறும் பாம்பு போல ஆழுள்ளத்தில் கிடக்கிறது.
பெளத்தர்கள் வேறு வழியைக் காட்டுகிறார்கள்? என கபாலிகனை அவனது மனைவி கேட்பது என் காதில் விழுந்தது.
அவர்கள் கிடக்கட்டும் அப்பாஷண்டிகள். இன்பத்தை விரும்பாதா கேடுகெட்டவர்கள். வா! நாம் பெளத்தர்களைப் பற்றிப் பேசி நாக்கை அசுத்தப்படுத்திவிட்டோம். அதற்குள் நான் அவர்களைக் கடந்து வந்திருந்தேன்.
மதுவையும் மாதுவையும் புசிக்கலாம் என புத்தர் எழுதிய வைத்த மூல நூல் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை கண்டுபிடித்து பெளத்த சங்கத்துக்கு நன்மை உண்டாக்குவேன். இது சர்வ நிச்சயம். ஏமாற்றுக்கார்கள் அந்த மூத்த பிட்சுகள். என்னைப் போன்ற இளம் பிட்சுக்கள் மேல் கொண்ட பொறாமை. நான் என்ன தாசி வீட்டில் அடைக்கலமா கேட்டேன்? இன்பம் என்றால் என்னவென்றே அறிந்திராதவனா நான்? எனது பிச்சைப் பாத்திரத்தை தடவிப்பார்த்துக்கொண்டேன். இன்பம் என்பதை இதன் வழியேதான் உணர்கிறேன். இன்னும் வணிகர்களிடமாவது பரிவு ஒட்டிக்கொண்டிருக்கிறதே!!
என்னைக் கண்டு வரவேற்றான் தனதாச செட்டி். கபாலத்தில் உணவுகளை வாங்கினேன். சமய விதிகளின் படி அதனை என் காவி ஆடைகளால் மூடி எடுத்துக்கொண்டு நடந்தேன். வெளியே அடிக்கும் வெயிலை பழிவாங்க மனதுக்குள்ளே தின்பதை பற்றியும், பெண்களுடன் குலாவிக்கொண்டு மது அருந்துவதைப் பற்றியும் கனவு கண்டுகொண்டிருப்பேன். அது உள்ளே குளிரவைக்கும். ஆனால் இப்போது பசி என் உடலெங்கும் பற்றி எறிந்தது. என்ன பசியா? எல்லா பசியும்? என்ன கொடுமையான விதிகள் இந்த வெயிலைப் போல?
அப்போது ஓய்! பெளத்த சன்யாசி நில் அங்கே என்ற சத்தத்தைக் கேட்டு திரும்பிப்பார்த்தேன்.
அதே கபாலிகன் அவனது மனைவியுடன் என்னை நெருங்கி வந்துகொண்டிருந்தான். நின்று அந்த அழகு பதுமையை ரசிக்க எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? அதற்க்காக அந்த குடிகாரப்பயலிடம் மாட்டி அவமானப்படவேண்டுமா? நடையின் வேகத்தைக் கூட்டினேன்.
தேவசோமா! என் பாத்திரம் அகப்பட்டுவிட்டது. எப்படி தப்பித்துக்கொண்டு ஓடப்பார்க்கிறான் எனச் சொல்லியவாறே ஓதி என் பக்கத்தில் வந்து நின்றான் கபாலிகன். பின்னாலே ஓட்டமும் நடையுமாக அவனது மனைவி வந்து நின்றாள்.
அழகான பெண்ணும் மாயைதான் இந்த உணவு போல. புத்தர் ஒரு நாளும் இதை தடைசெய்திருக்க வாய்ப்பில்லை. அவளது வில் போன்ற மோகன புருவங்களையும் கூத்தூசி போன்ற கண்களையும் பார்த்துக்கொண்டு மெய்மறந்து நின்றேன். அப்போது என்னை அறியாமல் பிச்சைப் பாத்திரைத்தை தடவிப்பார்த்துக்கொண்டேண்.
திருட்டுப் பயலே! உன் சீவாப் போர்வையில் மறைந்திருப்பதை நான் பார்க்க வேண்டும்.
அதில் என்ன இருக்கிறது? என்னுடைய பிச்சைப் பாத்திரம் என்றேன்.
என்னுடைய கபால பாத்திரத்தைக் காணவில்லை. அதில் வருத்த இறச்சியை வைத்திருந்தபடியால் ஒரு நாய் எடுத்திருக்க வேண்டும் இல்லை என்றால் ஒரு பெளத்த பிட்சு எடுத்திருக்க வேண்டும். உடலை அடக்கி ஒடுக்கி பயந்தவன் போல தெருவை பிராக்கு பார்த்துக்கொண்டு நடக்கிறாய். உன் மேல் எனக்கு சந்தேகம். காட்டு அதை.
உன்னுடைய கேலிப் பேச்சு போதும், என் பிட்சை நேரம் கடந்து போகிறது. நான் போக வேண்டும். பசியைப் பற்றி இவனுக்கு என்ன தெரியும்? கூத்தடிக்கும் மூடன் என மனதுக்குள் பொறுமினேன்.
என் தூய காபாலிக விரதம் அழிந்துவிட்டது. கபால பாத்திரம் இல்லாமல் நான் எப்படி காபாலிகன் ஆவேன்? அது என் நண்பன் போல. களவுப் பயலே கொடு அதை. காபாலிகன் முன்னைவிடவும் ஆக்ரோஷமாக கத்தினான். அவளது மனைவி லேசாக தள்ளாடியபடி மாட்டுக்கொம்பில் மதுவை வைத்திருந்தால். அவளும் சண்டையிட நேரம் பார்த்துக்கொண்டிருப்பதாய் எனக்குப் பட்டது. இதுவரை எந்த பெண்களுடமும் நான் சண்டையிட்டது இல்லை. எப்படி இருக்கும்? சைய்..என்ன எண்ணம் இது? எனக்கு நேரம் ஆகிவிட்டது.
புத்தம் சரணம் கச்சாமி என்றேன்.
பிரமணர்கள் தூங்கும் போது மகாபாரதத்திலிருந்தும் வேதாந்தத்திலிருந்தும் திருடி எழுதவில்லையா உனது புத்தர்? என்று சொன்னவனின் கன்னத்தைப் பிடித்து இழுத்து அவனிடம் இப்படிச் சொன்னாள் தேவசேனா
இந்த மதுவை அருந்தி உனது களைப்பை தீர்த்த பின் வாதம் செய்யவும். எப்படியும் அந்த கபாலப்பாத்திரம் உருப்படியாக கிடைக்கப்போவது இல்லை.
இருவரும் குடிக்கிறார்கள். பிறகு என்னைப் பார்த்து காபாலிகன் சொன்னான். நீ எனக்கு கெடுதல் செய்தவன் ஆனாலும் உனக்கும் பகிரச்சொல்லி எங்கள் சமய நூல் சொல்கிறது. இந்தா.. என அந்த மாட்டுக்கொம்பை என்னை நோக்கி நீட்டினான்.
என்னுடைய அதிர்ஷ்டம் நல்ல மதுபானம் கிடைக்கிறது. யாரவது பார்த்துவிட்டால்? அந்த பிச்சைப் பாத்திரத்தை வருடினேன். பாத்திரமே! வெகு நாளாய் தேடிய ஒன்று உன் இடம் தேடி வந்து வரவேற்க்கிறது. மனதை திடப்படுத்திக்கொண்டு ஐய்யோ! இது எங்களுக்கு தகுந்தது இல்லை. வேண்டாமென பதறுவதைப் போல நடித்தேன்.
இப்படிப்பட்ட அதிர்ஷ்டம் உனக்கு வேறு எப்போதும் கிட்டாது? என்ன சொல்கிறாய் என்றாள் தேவசோனா.
ஹா..ஹா..மனதில் ஆசை பொங்கி வாயில் வழிகிறது பார். அவனது பேச்சு குழறுகிறது தெரியவில்லை. மறுபடியும் சிரித்தான் கபாலிகன்.
என்னுடைய கபாலப்பாத்திரைக் காட்டு
கபாலப்பாத்திரமா?
இந்த உலகையே மாயை என்று சொன்னவனின் வழிவந்தவந்தானே நீ! பிச்சைப் பாத்திரத்தையும் இல்லை என்றா மறைக்கிறாய்?
பெளத்தனிடம் அன்பையா எதிர்பார்க்க முடியும்? நம்முடையது என்றால் பிடிங்கிக்கொள்ள வேண்டியதுதானே? என்றாள் தேவசோனா கோபமாக
திடுமென என்னை நோக்கி பாய்ந்துவந்தான் கபாலிகன். பதறியவனாய் நான் தள்ளி நில்! எனச் சொல்லி என்னையறியாமல் சற்று விலகிக்கொண்டேண். விலகியதை எதிர்பாராத கபாலிகன் தடுமாறி கீழே விழுந்தான்.
மூடனே! எனச் சொல்லி தேவசேனா எனது தலை முடியைப் பிடிக்க முயன்றாள். பெளத்த சங்கம் செய்த ஒரு நல்ல விதி இந்த மொட்டைத் தலை. புத்தர் ஒரு ஞானி. அவளும் கீழே விழுகிறாள். நான் அந்த அழகிய பதுமையின் கைகளை தீண்ட எண்ணி அவளை நோக்கி கைகளை நீட்டினேன். அவளும் கையைப் பிடித்து எழுந்தாள். பிச்சைப் பாத்திரம் போல வளுவளுப்பாக இருந்தது அந்த தொடுகை. சிலிர்த்துக்கொண்டேன்.
நாகசேனன….போக்கிரிப்பயல்…. என் மனைவியின் கைகளைப் பிடித்து இழுக்கிறான் என கத்தினான் காபாலிகன்.
துன்பத்தில் இருப்பவர்களுக்கு கை கொடுப்பது எங்கள் மதக் கட்டளை.
முதலில் விழுந்தவன் நான். வேடதாரி சந்தியாசி…..மனதில் இருக்கும் ஆசை உன் தொடைகளின் நடுமே தெரிகிறதே? அதற்கு என்ன ஆடையிட்டு மறைப்பாய்? எனக்கு இன்று புது கபாலப்பாத்திரம் கிடைக்கப்போகிறது?
எப்படி என்றேன்
இதோ உன் மண்டைதான் எனச் சொல்லியவாறு என்னைத் தாக்கத் தொடங்கினான் கபாலிகன்.
நான் பயத்தில் துக்கம் அநித்தியம் என உளரினேன்.
ஐய்யோ! பிரமணர்களுக்கு ஆபத்து! பிரமணர்களுக்கு ஆபத்து என அவன் பதிலுக்கு கத்தி தன் பக்க அணிதிரட்ட முயன்றான்.
என்ன ஆச்சரியம்! மகேந்திரவர்ம்ம பல்லவனே நேரில் வந்தி இருப்பது? குதிரையிலிருந்து இறங்கி எங்கள் அருகே வந்தான். மன்னனுக்கு சற்று பின்னால் மெய்க்காபாளர்களும் அதற்குப் பின்னால் அமைச்சரும் இன்னும் பின்னால் சில படைவீரர்களும் வந்தனர். குதிரைகள் நிறைய இன்னும் பின்னல் இருப்பது தெரிந்தது. இவ்வளவும் எப்படி திடிரென இந்த தெருவில் வந்தது? ஆச்சரியம். பிரமணர்களுக்கு ஆபத்து என்ற குரல் கேட்டதும் மன்னன் தெருவில் இறங்கிவந்துவிட்டானே?
இங்கு என்ன சச்சரவு்?
இந்த களவுப்பயல் நாகசேனன் என் கபாலப்பாத்திரதை திருடிக்கொண்டான். இது என்னுடையது மன்னா…
என்ன நாகசேனரே இவர் சொல்லுவது உண்மைதானா் என்னைப் பார்த்துக் கேட்டார் மன்னன். அதற்குள் வீரர்கள் பொது மக்களை பக்கத்தில் வராமல் தடுத்து, துரத்தி ஒரு அரனை அமைத்துவிட்டனர்.
பெளத்தன் பொய் சொல்வானா? அது எங்கள் சமயக் கட்டளை.
மன்னன் தலையை திரும்பி காபாலிகனைப் பார்த்தார்.
பிரதியட்சம் இருக்கும் போது காரண காரியம் தேவையில்லை.
நீங்கள் சொல்வதன் பொருள்? மன்னன் திரும்பவும் அவனிடம் கேட்டார்.
பிச்சைப் பாத்திரத்தை மறைத்து வைத்திருக்கிறான்! அதோ அங்கே என காபாலிகன் வினவினான்.
நன்றாக பாரும் ஐய்யா! எனச் சொல்லி பிச்சைப் பாத்திரத்தை அவன் முன்னால் நீட்டினேன்.
நிறத்தை மாற்றுவதில் நீர் கை தேர்ந்தவர். தூய வெண்மை நிறத்தில் இருந்த பாத்திரம் இப்படி காக்கையின் நிறத்திற்க்கு மாறிப்போய்விட்டதே! என வருத்தம் தேய்ந்த குரலில் சொன்னாள் தேவசேனா
வருத்தப்படாதே! பெரியவர்கள் குற்றங்களுக்கு கழுவாய் சொல்லியிருக்கிறார்கள் என்றான் காபாலிகன்
மன்னா் தாங்கள்தான் உதவி செய்ய வேண்டும் என அவரைப் பார்த்து வேண்டினேன். இன்னும் பசி என்னை வாட்டிகிறது வெய்யிலும்தான்.
வழக்காடு மன்றம் செல்ல வேண்டியதுதானே இப்படி எதற்க்கு தெருவில் சண்டையிடுகிறீர்கள் எனக் கேட்டான் மன்னன்.
பல விகார்களில் கிடைக்கும் பணத்தை சேர்த்து வைத்திருக்கும் இந்த பெளத்தர்கள் நீதிமன்றத்தில் இருப்பவர்களின் வாயைக் கட்டிவிடுவார்கள். பாவம் நான் ஏழை கபாலிகன். பாம்புதோலும் திருநீரும்தான் இருக்கிறது. காபாலிக பாத்திரமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். அதற்க்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுச் செல்கிறேன்.
கபாலிகன் அப்படிச் சொன்னதும் கோபமுற்றார் மன்னர்.
அந்த வேளையில் ஒருவன் கழுத்தில் காய்ந்த மாலையும் கிழிந்த ஆடைகளும் அணிந்து கொண்டு வீரர்களைத் தள்ளிக்கொண்டு வந்து மன்னன் முன் மண்டையோட்டை வைத்தான். ஒரு நாயிடமிருந்து இந்த பாத்திரத்தை வாங்கிக் கொண்டு வந்தேன் இதனை வாங்கிக்கொள்ளுங்கள்.
அதோ அந்த காபாலிகரிடம் அதனைக் கொடு. பாத்திரமில்லாமல் அவதிப்படுகிறவர் அவர்தான ்என்றார் மன்னர்.
அவன் மன்னர் காலடியில் இருந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் கபாலிகனிடம் நீட்டுகிறான்.
ஆ!! இது என்னுடைய பாத்திரம்..மறுபடியும் கிடைத்துவிட்டது. நான் மறுபடியும் கபாலிகன் ஆகிவிட்டேன் என ஆனந்த தாண்டவம் ஆட ஆரம்பித்தான் காபாலிகன். அந்த தருணத்தில் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தான புது ஆசாமி.
கோபமுற்ற மன்னர் இரண்டு எட்டில் ஓடிப் பிடித்து அவனது தலையை வெட்டி மண்ணில் சாய்த்தார். புது ஆசாமி கையில் வைத்திருந்த பாத்திரத்தில் ரத்தம் கொட்டி நிறைந்து வழிந்தது ஒரு ஓடை போல. பின்னால் மெதுவாக முண்டமும் தரையில் விழுந்தது. நான் முதன் முதலாய் ரத்தம் நிரம்பிய காபாலப் பாத்திரத்தைப் பார்த்தேன். அதன் மணம். இன்னொரு கபாலபாத்திரமும் தயரானது.
ஐய்யோ! என ஒரு பெண் குரல் கேட்டது. வீரர்கள் இருவர் அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டடு நின்றனர்.
அவர் என் புத்திசுவாதினம் இல்லாத கணவர். இப்படி அநியாயமாக கொன்றுவிட்டீர்களே! என கண்கள் சிவக்க பத்தினி தெய்வம் போல கத்தினாள்.
அமைசர் சட்டென ரத்தம் தோய்ந்த காபாலிகப் பாத்திரத்தை எடுத்துப் பார்த்துவிட்டு மன்னனிடம் வந்து சொன்னான். இது காபாலிகனின் பாத்திரமாய் இருக்க வாய்ப்பில்லை.
இதைக் கேட்டு அவள் வேகமாக துள்ளி குதித்து அழுதாள்.
நிவாரண நிதி வழங்குகள் அமைச்சரே! எனச் சொல்லிவிட்டு மன்னன் குதிரையில் ஏறி பறந்து போனார். பின்னாலே அவரது மெய்க்காப்பாளர்களும் சென்றனர்.
அமைச்சர் கண் இமைக்காமல் மன்னன் போன திசையை பார்த்துவிட்டு ஐந்து பொன் நாணங்களை அவள் அருகில் சென்று வீசி எறிந்தார். அவை அவள் காலுக்கு கீழே சென்று விழுந்தது. வெயிலில் அவை பிரகாசித்தது. கண்களை கூசச் செய்தது. புத்திசுவாதீனம் இல்லாதவனின் தலை சற்று தள்ளிக்கிடந்தது. ரத்தம் நிரம்பிய கபாலப் பாத்திரத்தில் இருந்து கொஞ்சம் மட்டுமே சிந்திய ரத்தத்துடன் அது கிடந்தது. என்னுடைய கைகளில் இருந்த பாத்திரம் கை நழுவிக்கீழே விழுந்தது. ஆக மொத்தம் மூன்று கபாலப் பாத்திரம் அங்கே கிடந்தது.
Comments
Post a Comment