Pages

Wednesday, October 21, 2015

உதிராத வெள்ளை பூ

மேக அணையை யாரோ முன் அறிவிப்பு இன்றி திறந்துவிட்டது போல இருந்தது நேற்று பெய்த மழை. தண்ணீரே பாத்திராத எங்கள் கிராமத்தில், கங்கையும், காவிரியும் கரைபுரண்டோடியது. நிரைமாத கர்ப்பினி, எப்பொது வேண்டுமானாலும் தன் பிள்ளையை பூமியில் செனிக்க வைக்க தாயாராய் இருந்தது வானம். உள்ளங்கையில் மஞ்சள் வண்ணத்தை பூசி திறந்து வைத்தாற்போல கள்ளிச் செடிகளின் பூக்கள் மலர்ந்திருந்தது. நீரோடியதால் நிலம் இரண்டாக பிளந்து வடுவாய் மாறியது. மனம் வடுவில் மாட்டிக்கொண்டு தவித்தது. என் கால்கள் மெதுவாக தலைவாசலை நோக்கி நடைபோட்டன.

சாமி எப்ப வந்தீங்க? என்ற கேள்வி நடை பயணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தது.
நான் பதில் எதுவும் கூறாததால், காது கேட்கவில்லை என்று நினைத்துக் கொண்டாள் போல.
தன் முன்னிற பல் வரிசையைக் காட்டிக் கொண்டு, மீண்டும் அதே கேள்வியை கேட்டாள் எண்பது வயது மதிக்கத்தக்க நாசுவன் சாதியை சார்ந்த குப்பா.
ம்.. இன்னக்கு தா காலைல வந்த குப்பா என்றேன், இருபத்தைந்தை வயதை  தாண்டாத கவுண்டன் சாதியை சார்ந்த நான்.
குப்பா நல்ல கருப்பு நிறம். தன் கனமான உடலை வெள்ளைச் சேலையைக் கொண்டு மூடியிருந்தாள். கைகளின் அனேக இடங்களில் விதவிதமாய்ப் பச்சை குத்தியிந்தாள். ஜாக்கெட் காலச்சாரத்திற்க்கு முந்தியே பிறந்ததாலோ என்னவோ, அவள் அணிந்து பார்த்ததே இல்லை.
ஊரின் சுபகாரியங்கள், காரியங்கள் எல்லாம் குப்பா இல்லாமல் நடக்கவே நடக்காது. சமையலில் தொடங்கி, எச்சை இலையை தூக்கி போடும் வரை மாறி மாறி ஓடியோடி உழைப்பாள். வீசேச வீட்டுக்காரங்களே போதும் போதும் என்று சொல்லுமளவு வேலை செய்வாள். கொடி அசைக்காமல் துவக்கி வைப்பாள், சத்தமில்லாமல் முடித்தும் வைப்பாள்.
ஆச்சுங்க சாமி என்று குப்பா நின்றாள். எல்லா வேலையும் முடிந்துவிட்டது. சம்பளத்தைக் கொடு என்று அர்த்தம். இவ்வளவு தான் சம்பளம் என்றேல்லாம் கிடையாது. சிலர் நாற்பது ரூபாய் தருவார்கள், சிலர் ஐம்பதும், நூறும் அவர் அவர் வசதிக்கெற்றவாறு தருவார்கள். பேரமே பேசாமல் வாங்கிக்கொண்டு போவாள். ஆனால் விஷேச நாட்களில் அவள் வீட்டில் அடுப்பெரியாது. மூன்று வேளை சாப்பாடுக்கும் அவர்கள் தான் பொறுப்பு. வெட்டியாய் ஊருக்குள் சுற்றிக்கொண்டிருப்பான் சிலோன். குப்பாவின் ஒரே மகன்.
சாப்பாடு போட இவ்வளவு நேரமா? வந்ததும் வாராததுமாய் ஓய்ந்துபோய் வரும் குப்பாவை பார்த்துக் கத்துவான்.
ஏன்டா விஷேச வீட்டுனா முன்னப்பின்னதா ஆகும். இந்த எசமானுக்காக அவங்க நேரமே ஒலையை கொட்டி அனுப்பி வைப்பாங்காலா? என்றாள் குப்பா.
“ஏய் சோத்த போடு. சும்மா பேசாத”, உரத்த குரலில் எச்சரித்தான்.
சும்மா கத்தாதடா.. சாமி மாடு மாதிரி ஊரைச் சுத்தி சுத்தி வர்ரையே, வந்து கூடமாட ஒத்தாசை செஞ்ச என்ன குறைஞ்சா போயிடுவ? பண்ணாடிகிட்டச் சொன்னா எதுவும் சம்பளம் போட்டுக்கீட்டுத் தருவாறு. என்றாள் சற்றே ஏக்கதுடன்.
அவ்வளவுதான். சிலோன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். வேலைக்கே செல்லாமல் வளர்த்த உடம்பு. கட்டி கட்டியாக உடம்பெங்கும் நிறைந்திருக்கும். கரடுமுரடான முகமும், குரலுமாய் இருந்தான்.
சட்டென அவள் கன்னத்தில் அறைந்துவிட்டான். என்ன எகத்தாளம் உனக்கு சாப்பாடு போடுனா?
ஐய்யோ அம்மா அடிச்சுப் போட்டானே இந்த சண்டாளப் பாவி. என்னக் கொன்னு போட்டுடு. அப்பத்தான உன் கோவம் அடங்கும். நா இருக்கறதுதான உனக்கு இடஞ்சலா இருக்கு, உறக்க கத்தினாள். சில நேரங்களில் யாராவது வந்து சமாதனம் செஞ்சு வைப்பார்கள்.
விஷேசம் இல்லாத காலங்களில், தோட்ட வேலைக்குப் போவாள். சில சமயம் யாராவது வயதானவர்களை பாத்துக்கொள்ள வேண்டி வேலை வரும். அது இது என்று பார்க்கமாண்டாள், எந்த வேலையானாலும் செய்வாள். ஊருக்கு வெளியே டாஸ்மார்க்கின் முதல் வாடிக்கையாள் சிலோன் தான். அதிகாலை ஆறு மணிக்கே ஊற்றிக்கொள்வான். போதை லேசா தெளிஞ்சா போதும், குப்பாகிட்ட காசுக்கு வந்து நிப்பான்.
டேய் பணமென்ன மரத்துலயா காய்க்குது? போடா என்று கத்தி அனுப்ப முயல்வாள்.
அது போதுமே குப்பாவை அடிக்க. எப்படியும் காசை வாங்கிக்கொண்டு போய்விடுவான். குடித்துவிட்டு வந்து மறுபடியும் அடிப்பான்.
ஏன்டீ காசு கேட்டா. உடனே தரமான்டயா? ம் சொல்லுடீ. கண்டபடி பெத்த அம்மா என்று கூட பாக்காமல் திட்டுவான். சில நேரங்களில் எட்டிக் கூட உதைப்பான். அப்படி உதைக்கும் போது, ஒருநாள் படாத இடத்தில் பட்டு குப்பா சுருண்டு படுத்துக்கொண்டாள்.
ஐஞ்சு வேளவு பண்ணைக்காரச்சி வீட்டில் அன்னைக்கு விஷேசம். என்னடா இது குப்பாவை இன்னும் காணோமே என்று வீட்டுக்கு வந்து பாத்திருக்காங்க. குப்பா வாசல்லையே படுத்துக்கிடக்கிறா, வாயில இரத்தம். சிலோன் போதை தெளியாம தின்னை மேல கிடந்ததை பார்த்து அவங்க கத்துன கத்துல ஊர் சனமெல்லாம் கூடிப் போச்சு.
அஸ்பத்திரில குப்பாவை கொண்டு போய் சேர்க்க வெங்கடேஸ் காரை ரெடி பன்னின கையோட, பெரிய பண்ணாடி பஞ்சாயத்தைக் கூட்ட ஏற்ப்பாடு பண்ணிவிட்டார்.
தலைவாசலில் உள்ள வேப்பமரத்தடியில் பஞ்சாயத்து தொடங்கியது. சொல்லுடா! பெத்த தாயை யாரவது கை நீட்டி அடிப்பாளா? கனத்த கோபத்துடன் பெரிய பண்ணாடி கேட்டார்.
ஊமையாகவே நின்றிருந்தான். இன்று மட்டும் தான் குடிக்காமல் இருக்கிறான். அவன் கை, காலை பார்த்தாலே தெரிகிறது.
இரண்டு போட்டதா பேசுவா சாமி இவ, என்று சொல்லி நாக்கை கடித்துக்கொண்டு கூட்டதிலிருந்து பொன்னான் நாசுவன் சிலோனை நோக்கி ஓடிவந்தான்.
“இருப்பா”, என்று தரியகார பண்ணாடி அவனை நிறுத்திவிட்டார்.
கிராம மக்கள் அனைவரும், ஒருத்தர் பாக்கியில்லாமல் வந்திருந்தனர். எனக்கு தெரிந்து நடக்கும் பெரிய பஞ்சாயத்து இதுதான். சிலோன் மேல் வந்திருந்த கூட்டம் கடும் கோபத்திலிருந்தது.
காலங்கத்தால தண்ணீ போட்டுக்கிட்டு ரோட்டுல படுத்துக்கிடக்கிற, அப்புறம் அவளை போய் அடிக்கிற. பாவம்டா அவ. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்குதாட? அவ இப்ப செத்துகித்து போன என்னடா பன்னுவ? மறுபடியும் கேட்டார் பெரிய பண்ணாடி.
சாமீ குத்தம்தானுங்க! என்றான் தலையை கீழ போட்டவாறு.
என்னடா பன்னறத பன்னிட்டு.. குத்தமா குத்தம்.. கத்தினான் பொன்னான். மேடையிலிருந்து கையை ஆட்டியதைக் கண்டதும், பேசுவதை நிறுத்திக்கொண்டான்.
அவ என்ன பன்னுவான்? எல்லாம் அந்த தண்ணீ உள்ள போனதும் பன்ற வேலை என்று சிலோனுக்கு அதரவாய் பேசினார் கத்திரிக்காம்பாளையப் பண்ணாடி. அதுக்கு எதுதவாது வழி பன்னுங்க. ஊர்ல பல பேர் நாசமா போறது இதனால தா என்றார் மீண்டும்.
இப்படிச் சொன்னதும், ஊரின் பல இளவட்டங்களின் கோபத்துக்கு ஆளானார். குறிப்பாக அவரது மகன் பாலகுமார். இவருக்கு வேற வேலையே கிடையாது சும்மா, என்று முனுமுனுத்தான்.
ஆமாங்க சாமி அவர் சொல்றது சரிதாங்க என்று வழிமொழிந்தான் பொன்னான்.
இராமசாமி நாடார் பெரிய பண்ணாடி காதில் ஏதோ ஓதினான்.
தண்ணீ அடிக்க மாண்டனு பஞ்சாயத்துல சத்தியம் பன்னிட்டு போ. அதை மீறின அந்த அம்மன் உன்ன சும்மாவிடாது பாத்துக்க என்றார்.
ஒருவழியாய் அம்மன் முன்னே சத்தியம் பன்னினான். பஞ்சாயத்தில் அவனுக்கு பல பேர் அறிவுரை சொல்லி ஒருவர் பின் ஒருவராய் கலைந்தனர்.
கொஞ்ச நாள் சத்தியத்தை கடைபிடிததான். பிறகு பழைய குருடி, கதவ திறடிங்கிற மாதிரி தா நடக்க ஆரம்பித்தது.
பண்ணைக்காராச்சி! பண்ணைக்காராச்சி என்று கத்திக்கொண்டே எங்கள் வீட்டுக்கு ஓடிவந்தாள் குப்பா. லேசாக மேல்மூச்சு வாங்கினாள்.
அந்த போஸ்ட்மேன் வந்தானா? இந்த மாசம் பணம் வல்லையே என்றாள் சற்று வருத்தத்துடன்.
இன்னும் வல்லைடீ, பதில் தந்தாள் என் பாட்டி.
பாத்தீங்களா. சண்டாள உங்களுக்கு கொடுத்துட்டு, எனக்கு கொடுக்காம போயிருக்கான். வசைபாடினாள்.
வல்லைடீ, இந்த செவிடுக்கு காது கேட்க்காது வேற கத்தினாள் பாட்டி.
ஆஸ்பத்திரியிலிருந்து வந்த பிறகு காது சரியாக கேட்க்கவில்லை அவளுக்கு பாவம்.
ம்க்கும் அடித்தொண்டையை செறுமினாள். அப்ப இரண்டு பேருக்குமே பண்ம் தராம ஏமாத்தறானா?
அடி! சர்கார் பணம் போட்டத்தான வரும். மாசம் உன்னோம் முடியலடீ என்று குப்பாவுக்கு கேட்கும் சத்ததில் பேசினாள்.
இரண்டு, மூனு நாள் இருக்கும். மறுபடியும் பண்ணைக்காராச்சி! என்று கத்திக்கொண்டே வந்தாள். நா சொல்லுல பணம் வந்திருச்சு பாருங்க! என்று இரு நூறுபாயைக் காட்டினாள். அவ ஏமாத்தறானா? கோபம் கொப்பளிக்க கேட்டாள்.
சரி சரி போ என்பதைப் போல சைகை காட்டினாள் பாட்டி.  
கொஞ்ச நேரத்தில் வந்த தாபால்காரார், இந்த குப்பா தொல்லை தாங்க முடில. மாச முடிறதுக்குள்ள பணம் பண்ம்கிற. வந்தா தான தற. போற இடமெல்லாம் வற்றா. ரொம்ப வருத்தப்பட்டு பேசிவிட்டுப் போனார்.
யாரோ சொன்னாங்கனு சிலோனுக்கு கல்யாண ஏற்ப்பாட்டை ரெடி பண்ணிணா குப்பா திடீருனு.
என்னடினு கேட்டதுக்கு. கல்யாணம் பண்ணிண இவன் திருந்திருவாங்க என வக்காளத்து வாங்கினாள்.
அவள் சொன்னது போல கல்யாணம் என்றதும் ஒழுக்கமாக தண்ணீ அடிக்காமல். ஊரே முக்கின் மேல் விரல் வைக்கும்படி தினமும் வேலைக்குச் சென்றான். எல்லோரும் பரவாலையே, சிலோன் மாறிடான்டோய் என்று பேசிக்கொண்டனர்.
முத முறையா குப்பா வீட்டுல சுபகாரியம். கல்யாணத்துக்கு முத நாளே வந்து, எல்லா பண்ணாடியும் உதவவேனும். வீட்டுல விஷேசம் வச்சுருக்கன் என்று வேண்டுகோள் வைத்தாள். அவள் விருப்பப்படி தடபுடலாய் நடந்து முடிந்தது.
சிலோன் ரொம்ப நல்லவானாய் சில நாள் நடித்தான். வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிக்கொண்டது. இதுநாள் வரை குப்பாவை மட்டும் தான் அடித்துக் கொண்டிருந்தவனுக்கு, அவள் பொண்டாட்டியும் கிடைத்துவிட்டாள். உண்மையில் கல்யாணத்துக்கு அப்புறம் குப்பா அடிவாங்குவது சற்று குறைந்துவிட்டது.
நா ஏன் வேலைக்கு போகனும்? கல்லு மாறி புருசன் இருக்கும் போது என்று சிலோன் பொண்டாட்டி சொல்லிவிட்டாள்.
இப்போது குப்பா தலையில் வந்துவிடிந்தது. மூன்று பேறுக்கும் சேர்த்து சம்பாதிக்கும் நிலை. காலையில் எழுந்ததும் வயதானவங்களை பார்த்துக்கொள்வது, பாத்திரம் கழுவுவது, பிறகு எல்லோருடனும் சேர்ந்து தோட்ட வேலைக்கு ஓடுவாள், வந்ததும் வாராததுமாய் திரும்பவும் பாத்திர கழுவ போய்விடுவாள்.
சிலோன் பொண்டாட்டி மாசமானதால், அவள் அம்மா வந்து அழைத்துக்கொண்டு போய்விட்டாள். குழந்தை பிறந்து ஒருவருடம் ஆகியும் சிலோன் போய் பாக்கவில்லை.அவளும் திரும்பி வரவில்லை. குப்பா எவ்வளவோ முயன்று பார்த்தாள். பிரிந்தது பிரிந்ததாகவே போனது.
வழக்கமாக தோட்ட வேலைக்கு எல்லோரும் கிளம்பும் போது, பொன்னான் பொண்டாட்டி மட்டும் கத்திக்கொண்டு ஓடிவந்தாள். அத்த! சிலோன் மச்சா நம்ம விட்டுட்டு போய்டாறு. ஐய்யோ! என்று இனக்குரலில் மீண்டும் கத்தினாள். கையிலிருந்த சாப்பாட்டு தூக்குச் சட்டியை அப்படியே கீழே போட்டுவிட்டு குப்பா தலைவாசலுக்கு ஓடினாள்.
இரத்த வெள்ளத்தில் செத்துக்கிடந்தான் சிலோன். ஓடிவந்தவள் அப்படியே அவனை தன் மடியில் தூக்கி வைத்துக்கொண்டு கத்தினாள். அவள் வெள்ளை நிற புடவை சிவப்பு நிறமாய் மாறியது.
குப்பா வீட்டிலும் காரியம் நடந்தது முதல் முறை. சிலோன் பொண்டாட்டி தன் குழந்தையை கூட்டிக்கொண்டு வந்ததும், குப்பாவை கட்டிக் கொண்டு ஒப்பாரி வைத்தாள். ஒரு வருட குழந்தைக்கு என்ன தெரியும்? சிரித்தது. ஒருவழியாய் சிலோனை அடக்கம் செய்தனர். குப்பா காரியம் முடியும் வரையிலும் சித்த பிரமை பிடித்தவள் போல இருந்தாள். முதல் முறை அவள் வேலை ஏதுவும் செய்யாமல் ஊருக்குள் நடந்த காரியம் இதுவே.
சிலோன் எப்படி செத்தான் என்று நேரில் பார்த்த ஒருவர் பக்கத்து ஊர்க்காரருக்கு விளக்கினார். அவ எப்பவும் போல தண்ணீயப் போட்டுட்டு ரோட்டுல வந்துருக்கா.. இவனுக்கு தா தண்ணீ போட்ட கண்ணு மண்ணு தெரியாதே!. லாரிக்கார வந்து ஒரே இடி. ஆள் ஸ்ப்பாட் ஆவுட். ஆத்தாக்காரி வந்து கத்துனா.முடிஞ்சு போச்சு என்று முடித்தார்.
ஆமா. அம்மனை ஏமாத்துனா? அம்மன் சும்மா விட்டுடுமா? சத்தியம் பண்ணி ஏமாத்துனான் அதான் இப்படி ஆகிடிச்சு என்றார் தரியகாரப் பண்ணாடி.
ஆமாங்க உங்க ஊர் அம்மன் சக்தி உள்ள தெய்வம் தாங்கோ என்றவாறு பக்கத்து ஊர்க்காரர் நகர்ந்தார்.
ஒரு வருட பேரனைத் தூக்கிக்கொண்டு மறுபடியும் ஓடி ஓடி உழைக்க தொடங்கினால். தன் மருமகளின் நிலை இவளுக்கு ஒன்றுன் புதிது இல்லை.
இதோ! சின்ன சிலோன் என்று ஊராரல் அழைக்கப்படும் குப்பா பேரன், அவள் மடியில் உட்காந்துகொண்டு அழுகிறான்.
இங்க பாரு! நீ வளர்ந்து பெரிய பையனானதும் நம்ம மாப்பிளைக்கவுண்டர் மாதிரி வரனும். அதுக்கு நீ ஒழுங்கா படிக்கனும் என்று புரியாத அவனுக்கு என்னைக் காட்டி சொல்லிக்கொண்டிருந்தாள்.
ஏங் குப்பா உனக்கு கஷ்டமா இல்லையா? என்றேன். சிலோனை இழந்த பிறகு இப்போதுதான் பார்க்கிறேன்.
அட என்ன சாமி மனுச வாழ்க்கை? அவன் கூப்பிட்டா போய்ட வேண்டியதுதான. அதுவரைக்கும் நம்மளால முடிஞ்சமட்டும் உழைக்கலாம் சாமி. நீங்க வேலையாய் கிளம்பிறிங்க போல நா வந்து நந்தி மாதிரி நிக்கிறன். நீங்க போங்க சாமி என்று சொல்லிவிட்டு, தன் பேரனை சுமந்துகொண்டு வேகமாக நடக்கத்தொடங்கினாள்.      
அதுவரை வடுவில் சிக்கியிருந்த மனம் வெளிவந்து தன்னம்பிக்கை பெற்றது.

   

No comments:

Post a Comment