Pages

Sunday, October 25, 2015

நான் யார்? பகுதி - 1


என் எண்ணங்களை போலவே அந்த தென்ன மரக்கீற்றும் நிலவை தொட்டுவிட துடித்தது. திறந்து கிடக்கும் வானம், மாற்றுத் திறனாளி நிலவு, ஆசிர்வாதங்களை பொழியும் பனி, எந்த வேளையும் சாபம் பேறப்போகும் மேகம், தலையை ஆட்டிக் கொண்டிருக்கும் மரம், இருளில் வெளிச்சத்தை தேடிக் கொண்டிருக்கும் என் இரு விழி. மிகுந்த சாமார்த்தியசாளி தான் நிலவு. நாளை கச்சேரிக்கு இன்றே பயிற்சி செய்யும் கூண்டில் அடைபட்ட பறவை. தேனில் நனைந்த காற்று, நீரைத் திருடும் கம்பரசரின் சத்தம், என்னைப் பார்த்து குறைக்கிற வாக்கிங் போகும் நாய், காற்றுக்கு ஆடும் சன்னல். இவைகள் இருந்தும் நான் தனிமையை உணர்ந்தேன்.

அதனை நான் விரும்பி ஏற்க்கவில்லை, தள்ளப்பட்டேன். அசுரத்தனமான ஓர் அலை இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தது. சொர்க்கத்திலே ஓர் நரகம் என்றால், அது என் மனம்தான். விபத்தில் கை, கால்களை இழந்து எத்தனையோ பேர் வாடுகிறார்கள். அதுபோல ஏதும் விபத்தில் என் மனதை இழந்தால் மிகவும் மகிழ்வேன். துன்பத்தை மட்டுமே தருகிறது இந்த மனம். தாங்கி கொள்ள முடியாத துன்பம். சித்தபிரமை பிடித்தவன் போல் அமர்ந்திருந்தேன்.
வாழ்க்கையை மறுபடியும் எண்ணிப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்த நினைவுகள் மலரை வட்டமிடும் வண்டைப் போல என்னை வட்டமிட்டது. சில சமயம் நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன்? கேள்விகள் என்னை குடைந்தது. இல்லை நான் செய்தது சரிதான் என மனம் வக்காளத்தும் வாங்கியது. எது சரி? எது தவறு? யார் தீர்மானிப்பார்கள்? வெட்டியாய் பேசும் இந்த மக்கள்? சமூக சட்டம்? மதம்? நாடு? புரியவில்லை இவர்கள் கோட்ப்பாடு.
நிலவு சில நேரம் மேகத்தோடு புணர்ந்து கொள்கிறது. அதன் பயனாய் நட்சத்திர பிள்ளைகளை பெற்றேடுக்கிறது. நீ இப்படித்தான் இருக்க வேண்டுமென யாரும் நிலவைக் கட்டுப்படுத்துவதில்லை. சரியான நேரத்திற்க்கு தேய்கிறது, பின் வளர்கிறது, புணர்கிறது. பொதுவான விதிகளுக்கு கட்டுப்பட்டுதான் வாழ்கிறது எனினும் தனக்கென ஒழுக்கத்தை கொண்டுள்ளது. யாரும் அதை அவர் அவர் நியதிக்குள் வைத்து மதிப்பிடுவதில்லை. ஆனால் மனித வாழ்க்கை அப்படிப்பட்டதில்லை.
 இன்னும் கன்னதில் கை வைத்துக் கொண்டு, வானத்தை அன்னாந்து பார்த்திருந்தேன். என் விழி நிலவு வெளிச்சத்திலே இளைப்பாறிக்கொண்டிருக்கிறது. ஒரு வித வெறுமை உணர்வை நிலவின் மேல் வீசினேன். நான் கஷ்டம் வரும்போதேல்லாம் வானத்தை பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். காரணம் ஒன்றுமே இல்லாத சூன்யத்தின் மேல்தான் சூரியனையும், மேகங்களையும், இன்னும் நிலவையும், நட்சத்திரத்தையும் கட்டி எழுப்பியிருக்கிறார்கள். அழகான நிகழ்வுகள் பகலிலும், இரவிலும் நிகழ்கிறது. ஆனால் மனிதன் அப்படியா எடுத்துக் கொள்கிறான்?
குளிரிலே என் தேகமேல்லாம் சிலிர்க்கிறது. நீரை திருடும் கம்பரசரின் சத்தம் நின்று கொண்டதும், பறவைகள் தன் பயிற்ச்சியை நிறுத்தியது. ஒருவேளை திருட்டுக்கு எதிராய் போராடுயிருக்குமோ? நாளை கவனிக்க வேண்டும் மனதுக்குள் எண்ணினேன். அடுத்த நாழிகை கொடூர நினைவுகள் மனதை அடைத்தது. மீண்டும் மனதுக்குள் வெளிச்சத்தை தேட ஆரம்பித்தேன். கும்மிருட்டு அகப்படவேயில்லை.

No comments:

Post a Comment