Tuesday, January 5, 2021

மோக முள் பற்றிய எனது புரிதல்கள்

வணக்கம் குருவுக்கு, தாங்கள் நலமா? இன்று மோக முள் படித்து முடித்தேன். உடனே அதனை பற்றி எழுதிவிட நினைத்ததன் விளைவு இந்த கடிதம். பிரமிள் ஒரு கட்டுரையில் காமம் தான் அடிப்படையான சக்தி, அதுதான் ஒருவனைக் கலைஞனாக்குகிறது (கவிஞனாக்குகிறது) என்கிறார். எனக்கு அப்போது இருந்த எண்ணம் காமம் வேறு, கலைகளைப் படைக்கும் சக்தி என்பது வேறு. முன்னது பாவமானது, பின்னது புனிதமானது. ஆனால் இந்த வேள்வி பல நாட்கள் என்னுள் இருந்து கொண்டிருந்தது. தனிப்பட்ட முறையில் சுதர்ம்மா பற்றித் தேடிக்கொண்டிருக்கிற எனக்கு இது முக்கியமான கேள்வியாக இருந்தது. ஏன் ராஜத்திற்க்கோ அல்லது அவனது கல்லூரியில் படித்த அவனது வயதை ஒற்றிய பையன்களுக்கோ பாபுவைப் போலத் தடுமாற்றம் இல்லை. ராஜம் மிகத் தெளிவான முன் முடிவுகளோடு இருக்கிறான். பெண்களை மனதில் வைத்துப் பூசிக்கிறான். பாலு தன் பூத்துக் குலுங்கும் காமத்தை அடக்க முடியாமல் தவிக்கிற ஆளாக இருக்கிறான். ஒரு பக்கம் ராஜத்தைப் போலப் பெண்களைப் பூஜிக்க முயலுகிறான், மறுபக்கம் தங்கமாளுடன் உறவும் கொள்கிறான். இது எல்லா மனிதர்களுக்குமான தவிப்பாய் இருந்தாலும், பாலுவுக்கு மித மிஞ்சி இருப்பது அவன் கலைஞனாக இருப்பதால் தான். காதல் என்ற புனித/சமூகம் கண்டு பிடித்த அழகான விசயமாகவோ அல்லது கலையாகவோ காமத்தை மடைமாற்றலாம் (உலகியல் வாழ்க்கையைக் கணக்கில் கொண்டு). இது இரண்டும் இல்லை என்றால் அது உடல் சார்ந்த ஒன்றாக மாறி அவன் ஆளுமையை அழித்துவிடும். வெற்றிடத்தைக் காற்று நிரம்புவதைப் போலக் காமம் நிரப்பிவிடும், கலைஞர்களுக்கு மிகப் பொருந்தும் வரி அது. காமத்தைக் கண்டு அஞ்சுகிற, தப்பானதாக நினைக்கிற சாதாரண மனிதனின் மனநிலையில் பாலு தங்கமாவைப் பார்க்கிறான். தங்கமாளுக்கு (காமத்திற்கு) அஞ்சி, தான் செய்தது யமுனாவுக்கான (காதலுக்கு) துரோகமென அவளிடமே போய் தவற்றை ஒத்துக்கொள்கிறான். அவளிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்துவிட்டுக் காத்துக்கிடக்கிறான். மறுபுறம் சங்கீத கலையைக் கற்க புது குருவைக் கண்டடைகிறான். கலையின் மூலம் அவளை மறக்க/கடக்க முயலுகிறான். (காமத்தை மடை மாற்றம் செய்கிறான்). இருந்தாலும் காதலும், கலையுமாக அவன் ஊசலாடுகிறான். அவன் அப்பா மற்றும் ராமண்ணா அவனிடம் காமத்தை அடக்கி கலையில் செலுத்துவதைப் பற்றி விவாதிக்கின்றனர். அப்பா பூடகமாகவும், ராமண்ணா நேராகவும். கலையை அடைவதென்பதில் இருக்கிற சிக்கல் பற்றிய நாவல் என்பதே என் எண்ணம். இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தவுடன் மனதுக்கு விலக்கமாக இருந்தது, பெண்கள் எல்லோரையும் மனதில் வைத்துப் பூசிக்கிறவன் என்ற சித்திரம். ஒருவன் வெளி உலகுக்கு அப்படி வேண்டுமானால் நடிக்கலாம் ஆனால் உள்ளூர அப்படி இருப்பார்களா என்பது சந்தேகமே? ஆண் பெண்ணை தனக்குச் சமமாக நினைப்பதே மிகப் பெரிய ஒன்று. ஒருவேளை அவன் காதலில் இருக்கும் சமயத்தில் மட்டும் அந்த பெண் வேண்டுமானால் அதி மானுடனாகத் தெரியலாம். பாலுவின், ராஜத்தின் அக மனம் இப்படி நினைக்கும் என எண்ணுவது கடினமான இருக்கிறது. ஒருவேளை நான் இந்த காலத்திலிருந்து அந்த கால மனிதனை எடை போடுவது என்பது தவறாகக் கூட இருக்கலாம். ராமண்ணா போல இருந்துவிட வேண்டுமென ஆசைப்படுகிறேன். வாழை மரத்தில் விழுந்த மழைத்துளியைப் பார்த்து ரசிக்கிற ஆளாக இருப்பது எப்படிப் பட்ட வரம். நத்தை ஊர்வதைப் பார்த்து அவர் அடையும் மகிழ்ச்சி. அந்த வாழ்க்கை கிடைத்துவிடாத என்ற ஏக்கம் இருக்கவே செய்கிறது. குருவுக்கும் சிஷ்யனுக்குமான உறவு எவ்வளவு முக்கியம்? உண்மையான குரு நம்மை ஞானத்தை நோக்கி நகர்த்திக்கொண்டே செல்கிறார், நம்மை அறியாமலேயே. ராமண்ணா உயிருடன் இருக்கும்வரை எனக்கு அப்படித்தான் இருந்தது. அவர் வழியே ஞானத்தின் சில கூறுகளை அறிந்துகொள்ள முடிந்தது. அவர் பாலுவைக் கச்சேரி பண்ண வேண்டாம், கலை என்பது காசு பண்ணுவதற்காக இல்லை, தன் ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு எனச் சொல்லி அவனைக் கச்சேரி பண்ணாதே என அறிவுறுத்துகிறார். ராமுவையும், மகாராஷ்டிரா சங்கீத வித்துவானையும் பக்கத்தில் நிறுத்திப் பார்த்தால் புரிகிறது அது. முன்னவன் தன் முழுமை அடையாத கலைக்காக ஏங்குகிறவன், ஆனால் அதை வைத்து பணம் பண்ணுகிறான். பின்னவர் கலையை முழுமை அடைந்தவர், எனினும் தனக்கு வந்த பணத்தைக் கோவில் உண்டியலில் போட்டுவிடுபவர், இரயில் சந்தடியில் உறங்குபவர், தேசாந்திரியாக அலைபவர். உலக லாபத்திற்காகக் கலையைக் கைக்கொண்டவனா?ஞானத்தை அடைவதற்குக் கலையைக் கைக்கொண்டவனா? யார் கலைஞன்? யாருக்குக் கலை வாய்க்கும்? அதனால் என்ன பயன்? இந்த வினாவை எழுப்பிவிட்டுக் கதை எங்கோ தள்ளிப் போய்விடுகிறது. காமம்-காதல்-கலை எனக் காமத்தின் பல பரிமாணங்களைத் தொட்டு மட்டுமே செல்லுகிறது இந்தக் கதை. நிச்சயம் ஒன்று மற்றொன்றை வெட்டி செல்லாமல் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறது, அதனால் ஆழமான தரிசனப் பார்வை கதைக்கு வாய்க்கவில்லை. இதைச் சாதாரண ஆண்-பெண் காமத்தைப் பேசும் கதை எனக் கடந்து போக வாய்ப்பில்லை. காரணம்: ராஜம் (சாதாரண மனிதன்) * பாலு (கலைஞன்) – ராமண்ணா (குரு) * பாலு (குழப்பமான சிஷ்யன்), மகாராஷ்டிரா சங்கீத வித்துவான் (கலைஞன்- ஞானி) * ராமு (கலைஞன் போல), பாலு (கலைஞன்) * தங்கம்மா (காமம்), பாலு (கலைஞன்) * யமுனா (காதல்). கலையை அடைய ஒருவன் எவ்வளவு தூரம் தன்னை அதற்குப் பழக்கப் படுத்த வேண்டும். ராகத்தைப் பாடிப் பாடி அதன் அழகைக் கண்டுபிடிக்கிறான் பாலு. ராமண்ணா இறந்த பிறகு, அவன் தனிமையில் அமர்ந்து சாதகம் பண்ணும் போது இவ்வாறு உணர்ந்து கொள்கிறான், “கச்சேரில ஒவ்வொரு ராகத்தையும் சாதகம் பண்ண எங்க நேரம், முணு மணி நேரத்துக்குள்ள எல்லாம் அதைப் பண்ண முடியாது. கச்சேரி பின்னால ஓடின அப்புறம் எங்க ரசிக்க காசுக்காக அத கூறு போட்டு விக்கலாம்”. ஓ! இதற்காகவா நம்மைக் கச்சேரி பண்ண வேண்டுமென ராமண்ணா சொன்னார் என உணர்ந்து கொள்வான். அதன் பின்னால் கதை காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதைப் போல மாறிவிடுவது, இதுவரை அளித்து வந்த அனைத்து சாத்தியக்கூறுகளையும் உதறிவிட்டு காதலை மட்டும் பேசு பொருளாக எடுத்துக் கொண்டதைப் போல (காமம்-காதல்) தோன்றுகிறது. அதுவும் எங்குமே எதீரிடில்லாது இருப்பது (முன்பு சொன்னதைப் போல) ஆழமில்லாததைப் போன்று இருக்கும் தோற்றதை அதற்குக் கொடுக்கிறது. நன்றி, மகேந்திரன்

Monday, January 4, 2021

வாசகர் கடிதம்: முதற்கனல் - வெண்முரசு

முதற்கனல் நாவலை படித்ததும் எழுதும் கடிதமிது. நாவலின் அமைப்பு இதற்க்கு முன் பழக்கம் (எனக்கு) இல்லாத ஒன்றாக இருந்தது. கதைக்குள் கதை. மேலும் வரலாறு ஒருவகை தொன்மாக முன் வைக்கப்படுகிறது. அதன் மாயங்களை எல்லாம் நிகர் கால வராலாற்று கருவிகளால் விலக்கி தட்டையாக்காமல், இன்னும் மாயங்களாகவே முன் வைப்பது ஆனந்தமாக இருந்தது. மனிதன் தொடர்ந்து எல்லாவற்றையும் பகுத்து தன் அறிவுக்கு உட்ப்பட்டதாக மாற்றுகிறான்.அது நல்ல விசயம்தான், அதே சமயம் அவனது வாழ்க்கை இப்படித்தான் என முன்னரே வகுத்துவிட்டால் எப்படி இருக்கும்? நிச்சயம் சலித்துப் போவான். அப்படி வரலாற்றையும் பகுத்து, ஐயம் திரிபுர சொல்லிவிட்டால்? நிச்சயம் கொடுமை. கற்ப்பனைக்கு வழி இல்லாமல் மனிதன் தற்க்கொலை செய்யவும் நேரலாம். நல்ல வேளை அது நடக்கவில்லை என்பது மகிழ்ச்சி. நான் மகாபாரதக்கதையை முழுவதும் அறிந்தவனில்லை. முதற்கனலில் கதை எனக்கு புதிது. அம்பையின் கண்ணீர் சிகண்டியின் வழி முதற்கனல் ஆனது. எனக்கு தெரிந்து ஆண்கள் நீர்நிலையின் மேல்தளத்தை போன்றவர்கள். மேலோட்டமாகப் பார்க்க அவர்கள் வீரர்களாகவும், புரட்சிக்காரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்தும் ஆழ் மனம் என்னவோ பெண் எனத் தோன்றுகிறது. அம்பை முதலானவர்களை பீஸ்மர் தானக அஸ்தினாபுரிக்கு தூக்கி வரவில்லை. தன் அன்னையின் அணையை ஏற்றுதான் அதனை நிறைவேற்றுகிறார். அதே போல சிகண்டிக்கும் பீஸ்மருக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை. ஆனால் தன் அன்னையின் பொருட்டு பழிவாங்க நினைக்கிறான். முதற்கனலே இரு பெண்களின் ஆசைக்கு இடையில் மாட்டிக்கொண்ட ஆண்களின் கதைதான். கதையில் அனைத்து ஆண் மகனையும் ஏதோ ஒரு பெண் ஆட்டுவிக்கிறாள். ஃபால்குனர் சொல்கிறார், அரசுகள் செறிகளால் ஆளப்படுகிறது, உணர்ச்சிகளால் அல்ல என்கிறார். அந்த நெறியை தொடர்ந்து பாதுகாத்து வருபவர்கள் பெண்கள்தான். மாற்று மதமோ, சாதியிலோ கல்யாணம் செய்தவர்கள் அப்பாவைக்கூட சம்மதிக்கவைக்கலாம், ஆனால் அம்மாவை முடியாது. இங்கு பண்பாடு என்பதே பெண்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றுதான். அவர்கள் நினைத்தால் எதையும் மீறலாம். உதாரணமான பீஷ்மரை, காசி நாட்டு இளவரசிகளை தூக்கிவரச் சொன்னது. நான் பின்தொடரும் நிழலின் குரலில், ஆண்களின் புரட்ச்சிதான் ரத்தமாக ஓடுகிறது, இதுவே பெண்கள் பண்ணி இருந்தால் எப்படி இருக்கும்? என வினாவாக எழுப்பப்பட்டிருக்கும். உண்மையில் பார்த்தால் எல்லாம் பெண்கள் தான் போல. கல்லைத் தூக்கிப் போட்டால் எப்படி குளம் கலங்குமோ, அது போலதான் ஆண்களும். இந்த நாவலுக்கும் மற்ற நாவலுக்கும் இருக்கும் வித்தியாசமாக நான் நினைப்பது. முழு விழிப்பு நிலையிலும் இல்லாமல், கனவிலும் இல்லாமல், இந்த நாவல் தொடர்ந்து மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி ஓடுவதை சில சமய்ங்களில் நினைத்து சிரித்துக்கொள்வேன். முக்கியமாக பீஷ்மர் கையில் முள்ளுடன் பாலைவனத்தில் நின்றது பல நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது. மேலும் இந்த நாவலைப் பற்றி வரும் நாட்களில் எழுதலாம் என நினைக்கிறேன்.

Saturday, January 2, 2021

கலைஞன் - சிறுகதை

சர்மா வெற்றிலையை தன் வாயில் அடக்கவும் காதர் எங்கள் அறைக்குள் வரவும் சரியாக இருந்தது. இருந்த ஒரு படத்தையும் ஸ்டுடியோ முடித்துவிட்டதால், அடுத்த வேலைக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். உடனே வரும் என்று தோன்றவில்லை. ஒரு வகையில் சும்மா உக்காந்து சம்பளம் வாங்கிக்கொண்டு போகலாம்தான். ஆனால் அதுவே வருடக்கணக்கானால், சும்மா இருப்பதைப் போன்ற ஒரு சுமை வேறு இருக்காது. எங்கள் லன்ச் டைம் முடிந்ததும் தூக்கம் போடாமல் இருக்க எதாவது ஊர் வம்பு பேசிக்கொண்டிருப்போம், ஆனால் இந்த மே மாத வெயிலின் புளுக்கம் தாங்காமல் கையில் கிடைத்த அட்டையை விசிறியாக ஆட்டிக்கொண்டிருந்தோம். சர்மா இன்னும் தன் உடலை என்னவோ கன கச்சிதமாக வைத்திருந்தார் ஆனால் அவரது கிராக்கிதான் இப்போது கொஞ்சம் இறங்கித்தான் போனது. ஒவ்வொரு பத்தாண்டும் சினிமாவின் போக்கு மாறிக்கொண்டே இருக்கும் அதில் பழையது முழ்கி புதியது வெளியே வரும் என சாமிக்கண்ணு நேற்று லன்ச் டைம்மில் சர்மா பற்றிப் பேச்சு வந்த போது சொன்னார். எப்படி மறுபடியும் பழைய இடத்தைப் பிடிப்பது என்று எனக்கு நன்றாக தெரியும் என்பதைப் போல வெற்றிலையை மென்று கொண்டிருந்தார். 

ஒரு கால் குட்டையான நாற்க்காலியின் பின்புறத்தை பிடித்துக்கொண்டு நின்றான் காதர். முன்னால் எப்படி வந்து நின்றானோ அதே போல. ஆனால் அவனது உடல் மட்டும் குறுகிப்போய், பத்து வயது சிறுவன் போல இருந்தான். 

வெள்ளை சொன்னாங்க....சர்மாவைப் பார்த்து பேச வந்தவன் அப்படியே தலையை கீழே போட்டுவிட்டான். 

சர்மா புளுக்கம் தாங்கமல் தன் மேல் பட்டனை கழட்டிவிட்டு, வெற்றிலையின் கார்வையை போக்க ம்க்க்க்க்க்..என செறுமினார். 

காதர்..நிமிர்ந்து சர்மாவைப் பார்த்தான். இல்லைங்க...தலையை சொறிந்தான். நீங்க தேடறது தெரிஞ்ச நா ஓடிவந்துருப்பங்க.. குற்றம் செய்தவன் போல கைகளை கட்டிக்கொண்டு நின்றான்.

இப்ப எனக்கே வேலை இல்ல நா ஒன்னும் பண்ண முடியாதுப்பா....

சார்..நீங்கலே இப்படிச் சொன்ன என்ன பண்ண முடியும்ங்க.....வாயில் கையை வைத்து கேவ ஆரம்பித்தான் காதர். ஒரு பிள்ளை நாலு மாசத்துக்கு முந்தி செத்துப் போச்சுங்க.பொண்டாட்டி என்ன வீட்டுக்குப் போன கொலகாரன்னு சொல்லி திட்டறா...குலுங்கி குலுங்கி அழுகிறான்.

சர்மா என்ன சொல்வதேன தெரியாமல் அவனை பார்த்துக்கொண்டு இருந்தார். 

பிள்ளைக சாப்பிட்டு ஒரு வாரமாகுந்துங்க...என்ன பண்றதுன்னு தெரிலைங்க.காதர் திரும்பி எங்களைப் பார்த்தான். பிறகு தன்னை தேற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தான். அவனது உடல் முழுக்க வியர்வை வழிந்துகொண்டிருந்தது. உங்க கம்பனில எதாவது வேல இருந்த போட்டுக்கொடுங்க சார்...

எங்களுக்கே வேல இல்லையேப்பா!! உனக்கு எப்படி வேல குடுக்கறது? சர்மா கோவப்படுவார் என நினைத்தேன். எவ்வளவு கஷ்டப்பட்டு அவர் கதை இலக்காவில் பேசி டைகர் ஃபைட்க்கு மற்றவர்களை சம்மதிக்க வைத்தார்? ஆனால் அந்த ரோலைச் செய்ய காதர்தான் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவரே வெள்ளையை அழைத்துக்கொண்டு போய் தேடி அலைந்தார். கடைசிவரை கிடைக்காமல் போனது அவருக்கு பயங்கர கோவத்தை வரவைத்தது. ரோல் கேக்கரானுக, கஷ்டப்பட்டு வாங்கிக்கொடுத்தா ஆளப் பிடிக்க முடியறது இல்ல. இனி யாரவது வரட்டும்? என கோவமாக திட்டுகொண்டிருந்தார் கடைசி கட்ட படப்பிடிப்பு சமயத்தில். அதில் துளி கோவம் கூட இல்லாமல் இப்போது காதரிடம் பேசுவது சற்று ஆச்சரியம்தான். 

எனக்கு ரோல்ன்னு எதுவும் வேணாங்க..என்ன வேலைன்னாலும் செய்யற என்றான் காதர். 

சர்மா யோசித்தார். காதுகளை நீவிவிடுவது அவரது பழக்கம். நா பாத்துட்டு சொலற..

நீங்க பாத்து எதாவது செஞ்சாத்தா உண்டு சார் என அவன் மறுபடியும் கேவினான்.

நா வேல பாத்து வைப்ப, நீ எங்காவது ஓடிப்போயிருவ இல்ல என கோவமாகக் கேட்டார். 

இல்ல சார் டேய்லி இங்க வந்து உங்கள பாத்துட்டுதா வேற எங்காவது போறதுன்னா போவ என தன் உடலைக் குறுக்கிகொண்டு கண்களை துடைத்தான் காதர்.

ம்.....ஒரு வாரங் கழிச்சு வா! நா வேற பக்கம் பேசிட்டு சொல்றம்ப்பா!! 

வேற பக்கங்களா? 

ஏ வேற பக்கம் போகமாண்டயா? ஏய்யா? இங்க எங்களுக்கே வேல இல்லைங்கற.. சர்மா கோவப்பட்டால் சற்று முன் நகர்ந்து கைகளை உயர்த்திப் பேசுவார். 

இல்லைங்க...இங்கயே வேல செஞ்ச, நீங்க படம் எடுக்கறப்ப ரோல் தருவீங்க...வேற பக்கம்ன்னா அப்படி முடியாதுங்க...

எல்லோரும் காதரையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

நா வேற வேல செய்யறதுன்னு சொன்னதே, ரோல் கிடைக்கும்கிறதுக்காகத்தா என்றான் காதர். 

உனக்கு அறிவு இருக்காயா? புள்ள குட்டிக சோறு இல்லாம கிடக்குது உனக்கு ரோல்தா முக்கியமா? சர்மாவின் கோபம் உச்சத்துக்கு வந்துவிட்டது.  காதர் தலையை தொங்கப்போட்டுக்கொண்டான்,

அப்புறம் பொண்டாட்டி திட்டாம என்ன செய்வா? சொல்லுய்யா? தனது பாக்கெட்டில் கையைவிட்டார் சர்மா.

ஐய்யோ வேணாமுங்க!! எனக்கு வேலமட்டும் இங்க போட்டுகுடுங்க அது போதும் சார் என்றான் காதர்.

சில்லறைகளை எடுத்து மேஜை மேல் வைத்தார். எங்களிடம் இருந்தது எல்லாம் சேர்த்து நாலு ரூபாய் தேறியது. போ!! போயி கேன்டில்ல சாப்பிடு..ஒரு வாரம் கழிச்சு வா..நா என்னால் என்ன முடியுமோ பாக்கற என்றார் சர்மா.

காசை வாங்கிக்கொள்ளவில்லை என்றால் சர்மா கோவப்படுவார் என நினைத்து அதை வாங்கிக்கொண்டான். எல்லோருக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியேறினான். 

சரியாக அடுத்த வியாழக்கிழமை எங்கள் காரியாலையத்துக்கு வந்தான், அன்று சர்மா அவரது நெருங்கிய உறவினர் சாவுக்குச் சென்றிருந்தார். காதர் அவரது இருக்கை காலியாக இருந்ததால் ஏமாற்றம் அடைந்தான். சரிங்க...நா வந்தேன்னு சாருகிட்டச் சொல்லுங்க..அடுத்த வாரம் வந்து பாக்கறேன்னுங்க எனச் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.  

எல்லோரும் காதரை கிட்டத்தட்ட மறந்துவிட்டோம் என நினைக்கின்ற தருணம் வெள்ளை வந்தான். அன்று காலை மணி பதினொன்று இருக்கும். சர்மா வெள்ளையைப் பார்த்து என்னய்யா இன்னும் பட ஆரம்பிக்கலையே என்றார்.

வெள்ளை எப்போதும் குழைக்கும்பிடு போட்டுவிட்டு, கள்ளச் சிரிப்பு சிரிப்பான். ஆனால் இன்று அப்படி எல்லாம் இல்லாமல் அவனது முகம் இருகிப்போயிருந்தது. சர்மா அப்போதுதான் அவனது முகத்தை கவனித்தார்.

வெள்ளை எப்போதும் ஒரு கால் குட்டையான நாற்க்காலிக்கு இரண்டடி தள்ளி நின்றுதான் பேசுவான். சார்..டைகர் ஃபைட் காதர் மண் லாரில அடிபட்டு செத்துப்போயிட்டானுங்க என்றான். 

எங்கள் எல்லோருக்கும் அது அதிர்ச்சியாக இருந்து. சர்மா அவனைப் பார்த்து, எப்பய்யா? என்றார்.

நேத்துதானுங்க...இங்க அவ வரம்போது அப்படி ஆயிடுச்சுங்க..என்றான். சர்மா கண்கள் கலங்கிப்போய்விட்டது. இப்படி ஆயிபோயிருச்சேய்யா? எங்கள் எல்லோரையும் ஒருமுறை திரும்பிப் பார்த்தார். அவ குடும்ப இப்ப நடுத்தெருவுல நிக்குதுங்க சார் என்றார் வெள்ளை.

நா என்னய்யா பண்ணறது என்றார் சர்மா? 

வெள்ளை ஜாபர் என அழைத்ததும், அதுவரை எங்கள் அறைக்கு வெளியே நின்றிருந்த பனிரண்டு வயது பையன் ஓடி வந்து வெள்ளை பக்கத்தில் நின்றான். நாங்கள் அந்த சிறுவனை ஆச்சரியத்தோடும் அதிர்ச்சியோடும் பார்த்தோம்.

காதரோட பெரிய பைன்ங்க...ஜாபர் கும்பிட்டுக்கொண்டான். இப்ப நா என்ன பண்ணனும்ப்பா என்றார் சர்மா.

எனக்கு எதாவது ரோல் இருந்த குடுங்க என்றான் அந்த சிறுவன்.

ரோலா? உனக்கு என்ன ரோல் தற்றது? அதுமட்டும் இல்ல இங்க இப்ப படம் எடுக்கலையே? வெள்ளை உனக்கு தெரியாதா என்ன? எதுக்கு கூட்டிட்டு வந்த?

எனக்கு டகர் ஃபைட் தெரியும்ங்க...நீங்க பாக்கறீங்கலா எனச் சொல்லிக்கொண்டு, துணிப்பையிலிருந்து காதரின் அதே முகமூடியை எடுத்தான் ஜாபர். 

பின்குறிப்பு: அசோகமித்திரன் அவர்கள் எழுதிய புலிக்கலைஞன் என்னும் சிறுகதையின் தொடர்ச்சி. புதிய முயற்ச்சி. 

சுடர்விட்டு எரியும் தீப்பிழம்பு

கோவில்கள் பற்றிய மிக முக்கியமான புத்தகமாக குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய "தமிழ் கோபுரக்கலை மரபு" என்னும் புத்தகத்தைச் சொல்லலாம். 




இந்த புத்தகம் ஒரு ஆரம்ப வாசகனுக்கு தமிழக கோவில்கள் மற்றும் சிற்ப்பங்கள் பற்றிய அரிய வாசலைத் திறக்கும் என நம்புகிறேன். இவர் ஆய்வுக்காக இலக்கியம், கல்வெட்டுக்கள், புதை பொருட்க்கள் (உதாரணமான நாணங்கள்) மற்றும் கோவில் சிற்ப்பங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்.

சொல் ஆய்விலிருந்து கோபுரங்களைப் பற்றிய ஆய்வு துவங்குகிறது. மாட்டுக் கொட்டில் எப்படி கோபுரம் ஆனது என்பதையும் அது எப்படி தமிழகம் வந்தடைந்தது என்பதும் மிக சுவாரசியமான பதிவு. சுடர் விட்டு எரியும் தீப்பிழம்பு எப்படி கோபுரத் தத்துவமானது என்பதும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம். 


கோபுர கட்டுமானம் பற்றிய தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது. அதோடு இல்லாமல் தமிழகத்தின் முக்கிய கோவில்களின் பழமை பற்றிய ஆராய்ச்சி ஆச்சரியமடைய வைக்கிறது. தஞ்சை பெரிய கோவில், திருவண்ணாமலை என பட்டியல் நீள்கிறது. திருவானைக்கா கோபுரம் அடித்தள கட்டுமானத்துடன் நின்று போனதால், கோவில் கட்டுமானம் எப்படி ஆரம்பிக்கும் என்பதை அறிந்த்து கொள்ள அது முக்கிய ஆவணமாக இருக்கிறது. பொதுவாக எல்லா கோவில்களின் அடித்தளம் மட்டும் கற்க்களால் கட்டப்பட்டு, அதற்க்கு மேல் செங்கற்க்களால் கோவில் உருவாக்கப்படும். அதற்க்கு சில விதிவிலக்குகள் உண்டு. உதாரணமான தஞ்சைப் பெரிய கோவில். அது முழுவதும் கருங்கற்க்களாலே உருவாக்கப்பட்டது. அதுவேகூட அதன் தனிச் சிறப்பு எனலாம். 

கோவிலின் ஓவியங்கள் மற்றும் அரண்மனைகளின் ஆய்வும் முக முக்கியமாகப்படுகிறது.  இடம் பெயர்ந்து எழுந்த கோபுரங்கள் பற்றிய ஆய்வும் இருக்கிறது. கடைசியாக சிற்ப்பங்களைப் பற்றி புரிந்துகொள்ள ஏதுவாக அதன் விளக்கங்கள் அமைந்துள்ளன. 

நிச்சயம் இந்த புத்தகத்தப் பற்றியும் அதன் உள்ளடக்கத்தைப் பற்றியும் விரிவாக பின்னாலில் எழுதும் வாய்ப்பு அமையுமென நினைக்கிறேன். 

குடவாயில் பாலசுப்பிரமணி அவர்களின் முகநூல்

Friday, January 1, 2021

விடாத பூதம்

இந்த பூதத்தைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்காது. தெரியாது என்று சொன்னால் நிச்சயம் நீங்கள் இன்னும் குழந்தைதான். விக்கிரமாதித்தியன் கதையில் வரும் வேதாளம் போலதான் இதும். விடுகதை போல கேள்வி கேட்க்கும், பதிலைச் சொன்னால் மற்றொரு கேள்வி. பதில் தீர்ந்து, தாகம் எடுப்பவன் தண்ணீருக்கு அலைவதைப் போன்ற நிலைமையை அடைந்த பின்னால் என்னைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கும். அப்பப்பா!! அந்த நேரம் எனக்கு வரும் கோவம் இருக்கிறதே!! உங்களுக்கு தெரியாததா அது. நான் யார் என முதலில் பாசமான நாய் போல வந்து நக்கி மேலே விழுந்து நய்ச்சியமாகக் கேட்க்கும்.

சின்ன வயது என்னை பழைய போட்டோக்களில் பார்க்கிறேன். இப்போது இருக்கும் உடலை கண்ணாடியில் பார்க்கிறேன். சர்வ நிச்சயமாக அதும் இதும் ஒன்றல்ல. சில சமயம் அடையாளம் காண்பது அவ்வளவு எளிதல்ல. அப்படியானால் நான்தான் அது (சின்ன வயது போட்டோவில் இருப்பது) என்று எப்படிச் சொல்ல முடியும்?  இன்னும் வயதானால் நிச்சயம் மாறிப் போவேன். அப்போது இந்த குழந்தை போடோவுடன் ஒப்பிட்டால், யாரும் நம்ப மாண்டார்கள். என்னை சிறுவயது முதல் வயதானது வரை நான் என எண்ண வைப்பது எது? உடலை நான் எனச் சொன்னால் சிரிப்புதான் வரும் இல்லையா? ஏனேனில் அது மாறும் ஒன்று. மாறாத ஒன்றையே நாம் எப்போதும் இது என அடையாளப் படுத்த முடியும். 

தண்ணீர் கட்டியானால் அது ஐஸ்க்கட்டி. யாரும் அதை தண்ணீர் என்று அழைப்பதில்லை. ஆனாலும் அதில் தண்ணீர் இருப்பதை யாரும் மறுக்க மாண்டாய் என நினைக்கிறேன். சில சமயம் அது ஆவிகூட ஆகலாம். அப்போதும் அதில் தண்ணீர் இருப்பதை மறுக்கமுடியாது. வேறு பெயர்கள் ஆனால் உண்மை ஒன்றுதான். அப்படியானால் அதே விசயம் நமக்கும் பொருந்தும்தானே? பூதம் இப்போது வேற்று வீட்டு நாய் போல வளர்த்த நம்மையே பார்த்து குரைக்கும்.

நான் என்பது உடல் என்ற வாதம் சரி எனப்படுகிறது. அப்படா என நான் திருப்திபட்டுக் கொள்ளும் போது, மறு கேள்வியால் அது என்னை மாடியிலிருந்து கீழே தள்ளிவிடுவது போல இருந்தது. உடல் என்பது வெறும் ஊர்திதான்.  இறந்த பின்னால் உடல் இருக்கும் ஆனால்  நீ இருக்க மாண்டாய்தானே ? ஏன் என்றால் அதை நான் என்று சொல்ல நீயே இருக்க மாண்டேன். அப்படியானால்  நான் யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை இல்லை என்றது.

உயிர் தான் நான்!! ஹாஹா.....மகிழ்ச்சி..ஏ!! பூதமே கண்டுபிடித்துவிட்டேன் என்னை விட்டு ஓடிவிடு, இனிமேலாவது என்னை நிம்மதியாக வாழவிடு. நான் செத்த பின்னால், என் உடலை யாரும் நான் என அழைப்பதில்லை அதனால் நான் என்பது உயிர் தான். எனக்கு அதில் துளிகூட சந்தேகம் இல்லை. மரங்கள் துளிர்விடுவதைப் போல பூதம் கேள்விகளை வீசிக்கொண்டே இருக்கிறது. வெட்ட வெட்ட தலை வரும் அரக்கன் போல அது. 

தூங்கும்போது நீ எங்கு இருக்கிறாய்?  நீ கிட்டத்தட்ட செத்துப்போனவன் தானே? அப்படியானால் உனக்கு அப்போது உயிர் இல்லை. ஹாஹா!!! பதிலுக்கு அந்த பூதம் என்னைப் பார்த்து நகைத்தது. கோபம் வரும் இல்லையா? நீங்களே சொல்லுங்கள்? எத்தனை அணைக் கட்டினாலும் உடைத்துக்கொண்டு வருகிறது இது. 

அப்படியானால் நான் என்பது இந்த உள் உணர்வுதான். என் ஐந்து புலன்களும் இல்லை என்றாலும் என்னால் என்னை உணரமுடியும். கனவுகள். அதில் வேறோரு உலகத்தில் நான் இளவரசிகளுடன் காதல் செய்ய முடியும், எதிரிகளுடன் போர் செய்து சாக முடியும்...உண்மை என்னவென்றால் என்னால் உயிர்தேல முடியும்?  இப்போது என்னவோ நான் சரியான பதிலைச் சொல்லிவிட்டேன் எனத் தோன்றுகிறது. பூதத்தை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. அது என்னை ஒரு நாளும் நிம்மதியாகவிட்டதில்லை. அப்படி நகைக்காதே!!

கோமாவில் இருப்பவனுக்கு உடலுமில்லை, உயிருமில்லை, உள் உணர்வும் இல்லை. அப்படியானால் அவன் யார்? பூதம் தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ள மறுபடியும் கேட்டுவிட்டது. கண்டிப்பாக இந்த முறை அது என் தர்க்கத்தை தாண்டிப் போய்விட்டது. நான் என்பது அந்த மூன்றும் இல்லைதான் ஆனால் நான் இருக்கிறேன். ஆனால் அதை எப்படிச் சொல்ல முடியும்? அந்த மூன்றும் இல்லாத போது எது தன்னை அது எனச் சொல்லிக்கொள்ள முடியும்? தன்னைச் சுட்ட அதனால் முடியாது ஆனால் அது இருக்கிறது. தர்க்கம் நின்று போனது, இதற்க்கு மேல் என்னால் பதில் சொல்ல முடியவில்லை.  ஆ!! இந்த முறையும் அந்த பூதம்தான் வென்றுவிட்டது. விடமாண்டேன்!!!!!! 



பிச்சைப் பாத்திரம்

  குறிப்பு : மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய மத்தவிலாச பிரகசனம் என்னும் அங்கத நாடகத்தை தழுவி எழுதப்பட்ட சிறுகதையிது. எழுத்தாளன் என்ற முறையில் கத...