நான் யார் – பகுதி 5

எரியும் சூரியன், நிலவைப் போல் குளிர்ந்தது. காற்று குளிர்தன்மையை நிலவிடம் இரவல் வாங்கிக்கொண்டு வந்து என் மீது பொழிந்தது. மேகம் நிழற்க்குடையானது. பறவைகள் கானம் புதுவிதமாய் இனித்தது. வில்லில் விடுபட்ட அம்பாய் சில பறவைகள் காற்றை கிழித்துக்கொண்டு வானில் பறந்தோடியது. மரங்கள் இளம்தளிரை வெளிக்காட்டி தன் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்தது. இலவம் பஞ்சு காற்றால் அலைகழிக்கப்பட்டபடி பறந்தது.  
தலையை உயர்த்தி அன்னாந்து பார்த்தேன், யாரோ சூரியனை வெட்டி போட்டது போல பாதி மட்டும் தான் தெரிந்தது மீதியை நான் வாழும் அடுக்கு மாடி கட்டிடம் மறைத்திருந்தது. காற்று வேகமாய் மோதும் போதேல்லாம் உடல் சிலிர்க்கத் தொடங்கியது. பரவசமாய் மனமிருந்தது ஆனால் காரணம் புரியவில்லை. தினமொறு ஜென்மம் எடுக்கும் சூரியன் கிட்டத்தட்ட மூப்பு நிலைக்கு வந்திருந்தது. அதனால்தான் குளிர்கிறதே என்னவோ தெரியவில்லை. மனமொறு வெள்ளைப் புரவிலெரிக்கொண்டு திக்கு தெரியாத மகிழ்ச்சிக் காட்டிலோடியது. அழைத்தாலும் இறங்கி வருவதாய் தெரியவில்லை. திடுமென இலவம் பஞ்சு என் வலது கையில் வந்து அப்பிக்கொண்டது. ஆச்சரியம் தாங்காமல் அதை பார்த்துக்கொண்டிருந்தேன். துரத்தாமலே ஒட்டிவிட்டதே? இடது தோளிலொரு பட்டாம்பூச்சி தன் அழகிய சிறகுகளை விரித்து வந்தமர்ந்தது. இவைகளேல்லாம் காட்சிப் பிழைகளா? இல்லை உண்மைதானா? மனம் குழம்பியது. என் அப்பார்ட்மென்ட்க்கு வெளியே சற்று சோம்பலை முறிக்க வந்து நின்றவன் நான்.
காட்சிகள் சட்டென நீல நிறமாய் மாறிப்போனது. திகைத்து போனேன் ஒரு நொடி, சுதாரித்த மறு நொடி தலையில் விழுந்த துணியை கைகளால் விலக்கிவிட்டு, வானத்தில் அன்னாந்து பார்த்தேன். சூரியன் இருந்த இடத்தில் சந்திரன் தெரிந்தது. எனக்கு மட்டும் சூரியகிரகணம். கண்களைச் சிமிட்டி அழுத்தமான பார்வையை செலுத்திய போதுதான் கண்டுகொண்டேன் அது சந்திரனில்லை, சந்தனக் காடென்று. இலைகள் உதிர்வதைப் போலிருந்தது அவள் முன் வரிசை பற்க்களை காட்டிச் சிரிக்கும் போது. இலவம் பஞ்சு பயணக் களைப்பை தீர்த்துவிட்டு, பறக்கத் தொடங்கியது. தரையிலே ஆச்சரியமடைந்தவனாய் நின்றேன் நான், வானத்து தேவதையாய் மொட்டமாடியில் அவள், இருவருக்குமிடையில் இலவம் பஞ்சு, அவள் தலைக்கு மேலே இரண்டு பட்டாம்பூச்சி, தேவதையைக் கண்டுவிட்டேன் என்று கீதம் பாடி மேகத்திடம் சொல்லும் நான்கு கிளிகள், அதைக் கேட்டு அவளைத் தீண்டத் துடிக்கும் மோகம் கொண்ட மேகம், மறைந்து நிற்க்கும் ஆதவன். மனமேறிய புரவி முன்னை விட மகிழ்ச்சிக் காட்டில் அதிவேகமாய் ஓடியது. கட்டுப்பாடுகள் கரையுடைந்து போயின.     
தீராதா மோகத்தால், மேகமுருகி மழைத்துளியாய் பூமியை நோக்கி வந்தது. கலவரமடைந்த காற்று அந்த துளியின் திசையை மாற்றி விட்டது. அதன் பயனாய், மழைத்துளி என் நெற்றியைப் பதம் பார்த்தது. தாக்குதலின் தன்மையை வைத்தே அது எவ்வளவு கோபத்தில் உள்ளது என்பது தெரிகிறது, என்றாலும் குளிர்ந்த தன்மையையே அது கடைசியில் விட்டுச் சென்றது. பட்டாப்பூச்சி மாற்றி மாற்றி தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு பறந்தது. யார் அவள் மேல் உட்காருவது என்ற சண்டையாய் இருக்கும். அதுவரை நான் விழிகளை நகர்த்தாமல் அவள் முகத்திலேலே லயித்திருந்தேன். சந்தேகம் வந்தவனாய் என் இடது தோள்பட்டையை பார்த்தேன், இன்னும் அந்த பட்டாம்பூச்சி அங்கேயேதான் இருந்தது. அதன் பார்வை அவளைக் கண்டிருக்காது போலும். திரும்பவும் மேலே பார்த்தேன். அவள் முகமிருந்த இடத்தில் இப்போது பாதி சூரியன் மட்டும் சுடர்விட்டான். எப்படி மாயமாய் மறைந்து போனால்? கேள்வி மனதிலோரு வியப்பை உண்டுபண்ணியது. கனவாயிருமோ? இல்லை. இருக்க வாய்ப்பேதுமில்லை, சாட்சியாய் என் மீது விழுந்த துணியை கைகளில் உணர்ந்தேன்.
மகிழ்ச்சிக் காட்டில் பயணம் செய்தவனை அந்த சந்தனக் காடு எதிர்கொண்டது சற்றும் எதிர்பாராதவிதமாய்.
ஹாய்! தேன் குரல் காற்றில் தேவகானமாய் வந்தது என் காதுகளுக்கு.
வானத்து தேவதை டீசர்ட்டும், நைட் பேன்ட்டும் போட்டுக் கொண்டு தரைக்கு வந்திறங்கியது. வானத்தைப் பார்த்திருந்தவன், குரல் கேட்டு இடப்பக்கமாய் திரும்பினேன். மிரட்ச்சியுற்ற பட்டாம்பூச்சி பயத்தில் சட்டென பறந்தது என் தோள்பட்டையிலிருந்து. அருகில் நின்ற தேவதை மேல் மோதி வண்ணங்களை சிந்திவிட்டோடியது.
ஒளியே தெரியாத காரிருளில் தள்ளிவிட்டதைப் போலவும், தீவே காணமுடியாத அழியின் அலையில் மிதக்கும் தென்னை மட்டை போலவும், மீளமுடியாத ஒரு இடத்திலிருந்து என் மனதை மீட்டுக்கொண்டு வந்து அவளிடம் புன்னகையைப் பொழிந்தேன். மனம் வார்த்தைகளை தின்றுவிட்டது, பேசமுடியாத ஊமையாகி நின்றேன்.
காற்றின் ஆனந்த ஒலி, மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் கொஞ்சல், சறுகுகள் கார் சக்கரத்தால் நசுக்கப்படும் சத்தம், அதைக் கேட்டு இறக்கையை அடித்து செல்லும் பறவையின் ஒலி, மழைப்பூச்சிகள் கத்தும் சத்தம் இவைகளை தவிர மெளனமாய் இருந்தது.
காத்துக்கு காய வச்சுருந்த துணி கீழ வந்து விழுந்துடுச்சு, கிளிப் மாட்ட மறந்துட்ட என்றாள் மாறாத புன்னகையுடன்.
என் துணியைக் குடு என்று மறைமுகமாக கேட்கிறாள் போல. ஆமா பயங்கர காத்த இருக்கு என்றேன், ஏதோ பேச வேண்டும் என்பதற்க்காகவே பேசியது மாதிரி இருந்தது.
உதடுகளை குவித்து தலையை மேலும், கீழும் ஆட்டினாள்.
துணியை குடுத்துவிடலாமா இல்லை கொஞ்ச நேரம் இப்படியே பேசுவேமா? மனம் கண்ணாம்பூச்சி விளையாடியது. உங்களை எனக்கு முன்னாடியே தெரியும் என்றேன்.
இமைகளை கேள்விக் குறியாக்கி கண்களைச் சுருக்கினால்.
ம்ம்.. போன வாரம் சர்ச்சில் பாத்த.
மறுபடியும் சிறுநகை புரிந்து நான் சொல்லுவதை ஆமொதித்தாள். கொஞ்ச நேரமாய் தன் முகபாவத்திலேயே கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள்
துணியை கொடுத்துவிடலாமா? ம்கூம்.. நீங்க??
லாஸ்ட் வீக்தா இங்க சிப்ட் ஆனோம். வாட் யூ டூயுங்?
ஒர்க்கிங் இன் சாப்ட்வேர், அவள் முகத்தில் ஏதேனும் மாறுதல் தெரிகிறதா என்று பார்த்தவாறு பதில் சொன்னேன். வாட் எபோட் யூ?
ஹவுஸ் ஒயிப் என்றாள். மனதில் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது அவள் பதில். பைத பை யுவர் நேம்?
கார்த்திக்..
ஆ.. கார்த்திக் ஐ கெவ் டு கோ.  மீட் யு அஃப்டெர் சம் டைம்.
ஏதுவும் பேச தோணவில்லை. தலையை ஆட்டிக்கொண்டே துணியை அவள் கைகளில் சேர்த்தேன்.
துணிகளை வாங்கிய பின், திரும்பி நடக்க கால்களை தூக்கியவள், சட்டென திரும்பி “ஐயம் சானுதாமஸ்” என்றாள்.

அவள் போய்க்கொண்டுருந்தாள். 

Comments

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)