நான் யார் – பகுதி 4


ஒற்றைக் கண் வானம், மேக உடுப்புக்களை உடுத்தி நாகரிகமடைந்து கொண்டிருந்தது. எனினும் சன்னல் வைத்த ஜாக்கெட்டின் வழி அழகான முதுகையும், வாழைத் தண்டைப் போல் வளுவளுப்பான இடையையும், மென்பாதங்களையும் இன்னும் வானம் காட்டிக்கொண்டுதானிருந்தது. மேகங்களை தொட்டுவிடும் உயரத்தில் ஏசு தன் இரு கரங்களையும் நீட்டிக்கொண்டு சர்ச்சின் உச்சியில் நின்றிருந்தார். ஒருமுறை பார்க்கும் போது வேதனையான முகமாய் தோன்றிற்று. கண்களை சிமிட்டி மறுமுறை பார்க்கும் போது கனிவும், அன்பும் நிறைந்த இன்முகத்தொடு வரவேற்ப்பதாய் எனக்குப் பட்டது. மரங்கள் சர்ச்சுக்கு பின்னால் பசுமை நிறத்தை நிறைத்திருந்தது. முன்னால் நின்று பார்த்தால் பச்சை நிற காய்க்குள் வெள்ளை நிற விதையைப் போல சர்ச் நின்றிருந்தது. கொக்கு கூட்டங்கள் மரங்களின் கிளையில் அமைதியின்றி உட்க்காந்திருந்தது. மெதுவாக முன்னால் இருந்த இரண்டு கொக்குகள் மட்டும் பறந்து, தன் இனத்தைச் சுற்றி வட்டமிட்டது. பின் எல்லாம் சேர்ந்து ஏசுபிரானை நோக்கிப் பறந்து வந்தது. துதிப் பாடல்களும், மணியோசையும் தொடர்ந்து காதில் விழுந்தது. எல்லோரும் இறஞ்சிக் கொண்டிருந்தனர்..

அந்த அழகான மாலை வேளையில் பார்க்கின் அழுக்கடைந்த பென்சின் மேல் அமர்ந்திருந்தேன். காலையிலிருந்த மனக்குழப்பம் இன்னும் தீர்ந்ததாய் தெரியவில்லை. துதிப்பாடல்கள் அழுத்தமான குரலால் பார்க் முழுவதும் பரவியிருந்தது.

பிச்சைக்காரர்கள் சர்ச்சின் வாசலில் வரிசையாக நீண்டிருந்தனர். அவரின் வரவேற்ப்பை ஏற்றார்களா என்று தெரியவில்லை. தினந்தோரும் சர்ச் வாசல் வரை வந்துவிட்டு, கடைசி வரை உள்ளே போகாமல் திரும்பிவிடுவர். எப்பொதும் போல சர்ச்சின் வாயிலில் கவலை தொய்ந்த முகத்துடன் எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தனர். யாரும் உள்ளே போகவும் இல்லை வெளியே வரவும் இல்லை காற்றைத் தவிர. அது மட்டும் உள்ளே, வெளியே என்று விளையாடிக்கொண்டிருந்தது. மேயின் கேட் திறந்துகிடந்தது. புழுதி, காற்றின் உதவியால் வட்டமாய் மேலெழுந்து சுழன்று பிச்சைக்காரர்களை தழுவியது, பிறகு வாயிலை நோக்கி மெதுவாக நகர்ந்தது. சந்தனக் காடு சட்டென வாயிற்க் கதவின் முன் மந்திரமிட்டதாய் தரிசனம் தந்தது. சற்றேக் குறைய அந்த புழுதிதான் தன் வட்டத்திக்குளிருந்த இடைவெளி வழியாக இவ்வளவு அழகான சந்தனக் காட்டை கொணர்ந்திருக்க முடியுமென தோன்றியது. அந்த சந்தனக் காடு அழகான பெண்ணானது. கண் முன்னே நடக்கும் மந்திரத்தைப் பற்றி சிறிதும் கவனம் கொள்ளாமல், பிச்சைக்காரர்கள் இன்னும் உள்ளேயே பார்த்திருந்தனர். தேன்ஆர் பொன் மலர்கள் அவள் இதழ்கள், வேண்டியவற்றை எல்லாம் தன்னுள் இழுக்கும் கருவேர்கள் அவள் விழிகள், பறவைகளமரும் பெருங்கிளை அவள் குழல். மேகங்கள் காட்டில் சாய்ந்ததால் அவள் மேனி உருவாகிற்று. அவள் சந்தனக்காடு. கண்களில் பாத்திருக்கும் போதே கானல்நீராய் மறைந்து போனால். புழுதி, அவள் மறைந்த இடத்திலேயே சுற்றி வந்தது. கண்கள் அந்த புழுதி சுற்றுவதையே உற்றுநோக்கியது. சற்று நேரத்திற்க்கெல்லாம் என் மனதுக்குள் அந்த புழுதி சுற்றுவதையே உணர்ந்தேன்.

சீராய் வெட்டப்பட்ட புல்வெளி மீது தண்ணீர் பைப் மழையை பொழிந்து கொண்டிருந்தது. புற்கள் வெட்கமே இல்லாமல் எல்லோர் முன்னிலையிலும் குளித்தது பிறகு தலையில் நீர்க்குல்லாவை அணிந்து கொண்டன. நடைபாதையின் இருபுறமும் பூமி தேவியின் தலைமுடியாய் சிறுசிறு செடிகள் வளர்ந்து நின்றது. அவள் மயிர்கள் பச்சை நிறமானவை. எப்பொழுதெல்லாம் வெழுத்துவிடுகிறதோ அப்பொதேல்லாம் மூப்படைகிறால் என்று அர்த்தம், சில மாதங்களில் திரும்பவும் இளைமையாகிறால். ஆனால் நான் பார்த்தவரை இங்கு மட்டும்தான் அவளை மூப்படையாமல் பார்த்துக்கொள்கிறார்கள் போல. அதனால்தான் இளமையோடும், அழகோடும் அவள் முடிகள் காட்சி தருகின்றன. மனம் சற்று நிதானமடைந்தது. என் பார்வை பார்க்குக்கு வெளியே நடந்து சென்றது. அட என்ன கொடுமை! வெளியே இருக்கும் மரங்களும், செடிகளும், புற்களும் இளமையிழந்து, அழகு குன்றி மூப்படைந்திருந்தது. பார்க்க பாவமாயிருந்தது.

எனக்கு அருகில் திடுமென ஏதோ ஒலி கேட்டு திரும்பினேன். கத்திரிக்கோல் கத்திக்கொண்டு புற்களையும், செடிகளையும் வெட்டிக்கொண்டிருந்தது. அனேகமாக கத்திரிக்கோல் எல்லா முடிகளையும் வெட்டிவிட்டிருந்தது. நிசப்தமாய் இருந்தது அந்த பார்க். பென்ஞ்சிலிருந்து எழுந்து கொண்டேன். நிசப்தம் என்பது நிசப்தமில்லை. வெட்டப்பட்ட செடிகளும், மரங்களும் கத்திய சன்னமான குரல் காதில் விழவில்லை. என்னால் கேட்க்க முடியவில்லை என்றால் அது நிசப்தம் என்று என்னை நான் ஏமாற்றிக்கொண்டேன்.

பார்க்கின் வாயிலில் நின்று உள்ளேயும், வெளியேயும் பார்த்தேன். பார்க் அழகானது, ஆனால் அடக்குமுறைக்குள்ளானது. அந்த மூப்படைந்த மரத்தின் மேல் ஒரு மரியாதை வந்தது.

Comments

Popular posts from this blog

குற்றமும், தண்டனையும்

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)