Saturday, August 11, 2018

தீராத விருந்து

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே

-      மிளைப்பெருங் கந்தனார், குறுந்தொகை 204

பற்கள் தேய்ந்துபோன கிழப்பசு புற்களை தின்பது சற்று கடினம். அதிலும் இளம்புல் என்பது சுவையானது, மணமானது. துளிர்விட்டிருக்கும் அதன் சிறு இலையை பற்க்காளால் கடிப்பது இயலாத காரியம். அதன் சிறு துளி மட்டும் அதன் வாயிற்கு சிக்கும். சுவையின் காரணமாக மறுபடியும் கடிக்கும். ஆனால் முழுதாக தின்ன முடியாது. விடமுடியாமலும், தின்ன முடியாமலும் தவிக்கும். அது ஒரு தீராத விருந்து.

காமம் காமம் என்று எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். சில வேளைகளில் அதனை நோய் என்றும் மோகினி என்றும் சொல்லிவிடுறார்கள். உண்மையில் அது தீராத விருந்து. மனிதனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் எல்லைகளினால் முழுதாக அதனை அடையமுடியாது, ஆனால் அதன் சுவை காரணமாக விடமுடியாமல் தொடர்ந்து உண்ணும் விருந்து. தின்னத் தின்ன தீர்ந்து போகாது. எத்தனை யுகங்கள் கண்ட பழமையான ஒன்று, இன்னும் மனிதனால் அதன் மர்ம முடிச்சை அவிழ்க்க முடியாமல், தொடர்ந்து அவிழ்க்க முயலுகிறான் போலும். தலைமுறை தோறும் முயன்றுவருகிறார்கள். அது இயற்கையின் முடிச்சு, அவிழ்த்துவிட்டால் உலகின் அனைத்து மர்மங்களும் தெரிந்துவிடும். ஆனால் முடியுமென்று தெரியவில்லை. ஏனென்றால் அது தீராத விருந்து.   




தூங்காத விழிகள்

நள்ளென்ற றன்றே,யாமம்; சொல்அவிந்து

இனிதுஅடங் கினரே, மாக்கள்; முனிவுஇன்று;

நனந்தலை உலகமும் துஞ்சும்;

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.


-      பதுமனார், குறுந்தொகை 06

காதல் நெல்லிக்காயைப் போல தின்னும் போது துவர்க்கும் பின்பு இனிக்கும். தண்ணீர் குடித்தால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும். தின்னவும் முடியாமல், துப்பவும் முடியாத நிலை. காதல் கொண்ட நினைவுகள் எழும்போது சிறு துண்டு இனிப்பை விழுங்கியது மாதிரி தொண்டைக்குழிக்குள் இனிக்கும். சிறு நொடி இன்பம். சாரல்மலை பொழியும் போது சட்டெனச் சூரியன் வந்து சுட்டெரிக்கும். அந்த நினைவுகள் மறைந்த பிறகு துன்பம் துன்பம். இன்பத்திற்கு நிகர் துன்பம். இன்பமும் துன்பமும் மாறி மாறி, மாரி காலம், வெனிர் காலமாய் வருகிறது. ஒரே நேரத்தில் துன்பப்படலாம் அல்லது இன்பமுறலாம். ஒரு நொடி குளிர் மறுநொடி வெயில். எப்படித் தாங்கிக்கொள்வது. 


“கங்குள் வெள்ளம்” என மறுபாடலில் இருட்டை வெள்ளமென்கிறார்கள். இருள் ஆழமானது, மர்மமானது. நேரடியாக அடிமனதை திறந்துகாட்டிவிடும். எளிதாய் நெல்லிக்காய் கிட்டிவிடும். பிறகு தீராத அந்த இருளென்னும் நதி வெள்ளத்தில் நீந்த முடியாமல் மூச்சு திணறி விழி பிதுங்கும் வேளையில், யாமம் நள்ளென்ற சத்தமிடுகிறது. அது என்னைப் போன்ற அபலைகளின் கையறுநிலையிலான மனக்குமுறல்காளா? இருக்கும். என்னைச் சேர்ந்தவர்களின் பேச்சொலி அடங்கிவிட்டது. நிச்சயம் அவர்கள் மகிழ்ச்சியாய் தூங்குகிறார்கள். இந்த அகன்ற உலகமும் தூங்குகிறது. இதுவல்லவோ நான் அவரைச் சந்திக்க செல்லும் நேரம். ஆனால் அவர் அவர் வரவில்லை. அவருடன் காதல் கொண்ட நினைவிகள் மட்டும் எழுகிறது. அதனால் நான் மட்டும் தூங்காமல் விழித்திருக்கிறேன். தூங்கிவிடமுடியுமென நினைவிறீர்கள்?


Thursday, August 9, 2018

பிரிவின் வழி


நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே.
-        ----      காமஞ்சேர் குளத்தார், குறுந்தொகை 04


பிரிவின் வழி கொடுமையானது. அதை எப்படி தாங்கிக் கொள்வதென்பது நிச்சயம் பிடிபடாத ரகசியம். மனதினுள் அது அணுப்பொழுதும் ஊறி வழியும் போது, அதை நினையாமல் உதறியேறிவதன்பது நடக்காதக் காரியம். எந்தக் காதல்தான் அமைதற்கு அமையாத காதல்? வழிதாளாமல் அவள் உள்ளம் பிதற்றுகிறது. அவன் எனக்கானவன், எனக்கு மட்டுமே ஆனவன். அதே போல் நான் அவளுக்கு உரியவள். அப்படிப்பட்ட காதலர் பிரிந்துவிட்டாரென்பது தாளமுடியாத துயரம்.

இரவெல்லாம் தூங்காமல் தலைவனை எண்ணி எண்ணி, அழுது சிவந்த கண்களது. உள்ளத்தின் வெம்மை தாங்காமல் கண்ணீர் சூடாகி வழிகிறது, வெம்மையான கண்ணீரைமட்டும் தாங்கிக் காத்திருக்கிறாள். அது இமையைச் சூடுகிறது. நோயால் நெஞ்சு படும் பாடு சொன்னால் புரியாது. அதனால் பிதற்றுகிறாள். தலைவன் வருவானோ என்ற ஏக்கம் மனதில். நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே!

தேன்கூடு

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே- சாரல்
கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

குறிஞ்சிப் பூ மலையின் உயரத்தில் மட்டும் பூப்பது. ஒன்பது முதல் பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை மட்டும் பூக்கும். பூத்தால் நிலம் தெரியாதளவு மலர்கள் விரிந்து கிடக்கும். தேனீகள் அதனைக் கொண்டு பெரிய கூடு கட்டும். மற்ற தேன்கூட்டில் எல்லா மலர்களின் தேனும் கலந்து இருக்கும் ஆனால் குறிஞ்சிப் பூ மலர்ந்தால், அதன் தேன் மட்டுமே கூடுகளில் இருக்கும். காரணம், தேன் மலிந்து கிடக்கும் அக்காலத்தில்.பெருந்தேன் இழைக்கும். 

தலைவனைச் சந்தித்த நினைவுகளை மட்டுமே கொண்டு அவள் கட்டிய தேன்கூடு. சந்திப்புக்கள் நிகழ்வது ஆபூர்வம். சந்தித்தால் அன்பு வழிந்தோடும், அதனை நினைவுகளாய் ஊறிஞ்சி, அவள் கட்டிய தேங்கூடு. அதில் அவன் நினைவுகள் மட்டும். அதன் ஒரு துளியை எடுத்து ருசித்துப் பார்த்தால், அது நிலத்தினும் பெரிது, வானினும் உயந்தது, நீரினும் ஆழமானது. 

Sunday, August 5, 2018

நறுமணம் உளவோ?


கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமம்செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின், மயிலியல்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியதும் உளவோ நீ அறியும் பூவே

-இறையனார், குறுந்தொகை.



காதலன் அல்லது காதலி தரும் பரிசுப் பொருட்கள் என்ன மதிப்பு என்று கணக்கிட முடியுமா? அவை பொருட்கள்தான், நிச்சயம் சந்தையில் அதற்கு மதிப்பிருக்கும். ஆனால் அதே மதிப்பைக் காதலில் பொருத்திப் பார்த்தால் வரும் சிக்கல்தான் இந்தக் கவிதையிலும் வரும் சிக்கல்.


இயற்கையிலேயே பெண்ணின் கூந்தலுக்கு மணமுண்டா? என்ற கேள்வி மிகப் பிரபலமானது. நிச்சயமாக மணமில்லை என்பது உண்மை. அது உலகின் நியதி. ஆனால் காதலுக்கு மட்டும் பொருந்தாது.


காதல் புரியும் காதலர், தாங்கள் வாழும் தனிப்பட்ட உலகிற்கு சென்றுவிடுவார்கள்.  அதே கடற்க்கரைதான், ஆனால் அது வேறு உலகம். எப்படி குழந்தைகள் ஒரே டப்பியைச் சமையல் பாத்திரமென்றும், உடனே அதை வீடெனவும் மாற்றிக்கொள்ளும் வேறுபட்ட உலகத்தில் இருக்கிறார்களோ அதே போலத்தான், காதலர்கள் உலகமும்.

காட்டை வாசனை மூலம் அறிந்து தேனை மட்டும் ஊறிஞ்சி வாழும், அழகிய இறகுகள் கொண்ட தும்பியைக் கேட்கிறான். அவனுக்கும் சற்று சந்தேகம்தான். அதனால்தான் உண்மையைச் சொல் என்கிறான். காதலனாய் ஆனதும் கூந்தலில் மணம் வருவதும், சாதாரணமானவன் ஆனதும் மறைந்து போவதும், அவனுள் கேள்வியை எழுப்பி இருக்கிறது. அதற்கு சரியானதென தும்பியிடம் கேட்டுள்ளான்.


ஜெயமோகன் சொல்வது போலக் கவிதை நிகழ்காலத்தில் தான் நடக்கிறது. இது எழுதி இரண்டாயிரம் வருடமிருக்கும். ஆனால் அது படிக்கும் கணத்தில்தான் நடக்கிறது. எனவே காதலனாய் படிக்கும் போது கவிதை திறந்துகொள்ளும். அறிஞர்கள் போல (நக்கீரனார்) படித்தால் நிச்சயம் பாட்டில் பிழை இருக்கும். கவிதை திறக்காது.  
  



Monday, April 30, 2018

மீண்டும் ஒருமுறை


முன்னால் இருப்பவரின் நிழல் கவிந்து என் தலையை தொட்டது. நானும் அவரைப் போல தலையை மண்ணில் புதைத்து பிட்டத்தைத் தூக்கி கிடந்தேன். பலத்த அமைதி நிலவியிருந்தது. கருஞ்சிவப்பு நிறத்தில், வாசனையில்லாததாக இருந்தது மண். களிமண் போல பார்வைக்குத் தெரிந்தாலும், அது இல்லை. வாசனையற்று இருந்தது. உருண்ட சிறிய மண் துகள்கள் உதடுகளைத் தொட்டும், கன்னங்களில் முத்தமிட்டும் வெம்மையைத் தந்துகொண்டிருந்தது. இன்ன காரணமென்று தெரியாது, சரிந்து கிடக்கிறேன். முன்னால் இருந்த சுவரில், இரு ஓரங்களில் சாளரங்கள் இருப்பதாய் தோன்றிற்று. அதன் உயரம் காரணமாக அதனைப் பார்க்க இயலவில்லை.  வெள்ளை நிற ஒளி அதனூடே படர்ந்து அறையை நிறைத்துவிட்டிருந்தது. பக்கவாட்டு சுவர்களும் அதே போல் உயர்ந்து கிடந்தது. கருப்புநிற தீற்றல்கள் ஆங்காங்கே அசிங்கமாய் அதன் மீது தெரிந்தது, எனக்குக் குமட்டல்களை வரவழைத்தது. சுற்றும் பார்த்தேன். அனேக நபர்கள் என்னைப் போலவே தலையைப் புதைத்து  கிடந்தனர்.  இங்கு எப்படி வந்தேன்? இதற்கு முன் எங்கே இருந்தேன்? நான் யார்? இவர்களுடன் என்ன பண்ணுகிறேன்? அடுத்து என்ன பண்ணவேண்டும்? யாரைக் கேட்கலாம் என்ற கேள்விகளை மனம் அடுக்கிக் கொண்டே போனது. சற்று தலையை தூக்கிப் பார்த்த போது அறை முழுக்க என்னப் போலவே நிறைய மனிதர்கள் இருப்பதைக் கண்டேன். சுவரை ஒட்டியிருந்த இடம் தாழ்வாகவும், பின்னோக்கி வரவர உயர்ந்துகொண்டும் போனது. வியர்வைக் கண்களில் வழிந்து எரிச்சலைக் கொடுத்தது. கண்களைக் கசக்கினேன்.

பின்னால பாருடா திவாகர், அது நிக்கிது. நல்ல ஒழிஞ்சுக்க…கேய்ய்ய்ய்ய்ய் என யாரோ கத்தினார்கள்.

மனம் திகிலுற்றது. புலன்கள் அனைத்தும் உயிர்தெழுந்தன. பார்வை கூர்மையானது. திரும்பிப் பார்க்க அச்சமாய் இருந்தது.
சிவராமன் நீயும்தான்டா…..சரியா ஒழியல….மண்ணுக்குள்ள போயிடு. உள்ள…ஆமா என மறுபடியும் அதே குரல் ஒழித்தது. முன் இருந்தவரும் என்னைப் போலவே அச்சப்படுவது தெரிந்தது.

அப்போதுதான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன். நானும் எனக்கு முன்னால் இருப்பவனின் உடல் மட்டும் மண்ணுக்கு மேலே கிடந்தது. மற்றவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள் ஆனால் உடல் மண்ணுக்குள்ளே போய்விட்டிருந்தது. கால்கள் உதற ஆரம்பித்தது. எதற்காக இந்தப் பயம் என நானே என்னைக் கேட்டுக்கொண்டேன். காரணமற்றது, முட்டாள்தனமானது என என்ணிய அடுத்த நொடி மீண்டும் பயம் வந்து சூழ்ந்துகொண்டுவிட்டது. சற்று வெட்கமாகவும் ஆனால் உயிரின் மீதான பயமோ அது என்ற சந்தேகத்துடனும், தலையைச் சற்று திருப்பி பின்னால் என்ன இருக்கிறதெனப் பார்த்தேன். கொரில்லா குரங்குபோல உயரமாய் அறையின் நுழைவாயிலை அடைத்துக்கொண்டு நின்றது. எதற்காகவோ காத்திருக்கிறது, ஆனால் எவ்வளவு நேரமெனத் தெரியவில்லை. தப்பிப்பதற்கான கால அவகாசம் இதுதான் போலும் என எண்ணிக்கொண்டேன். அதன் கால் மற்றும் கை நகங்கள் சிங்கத்தைப் போன்றே இருந்தது மனதை நிரந்தரமாக அச்சத்தின் பிடியில் மாட்டிவிடுவதாக இருந்தது. சட்டென நினைவுகள் நதியேன பெருக்கெடுத்தன. இதைப் போலவே கிடப்பது முதல் முறை இல்லை என்றும், பல முறை விளையாடிவிட்டிருப்பதாகவும் தோன்றிற்று. எப்படித் தப்பித்து விளையாடினாலும் கடைசியில் இந்த மிருகத்தின் பிடியில் மாட்டி மடிவதும்தான் நடந்திருப்பதாய் நினைவு. நினைவுகள் விலகி நிஜம் மூளைக்குள் குடிகொண்டதும், தப்பிப்பது எப்படி என்று எண்ணத்தொடங்கினேன். முன்னால் இருந்தவர் எழுந்து ஓடி வலதுபுறத்தில் மண்ணைப் பறித்தார், நானும் அவரைப் போலவே மண்ணைப் பறித்து உட்புகுந்தேன். முதுகு மட்டும் மண்ணிற்கு வெளியே தெரிவதாய் தோன்றிற்று. அந்த நினைவே முதுகுத்தண்டில் சில்லிடலை ஏற்படுத்தியது. நினைத்தது போல இது விளையாட்டா? இல்லை உண்மையா? இது விளையாட்டு என்றால் எது உண்மை? இது உண்மை என்றால் நான் செத்துவிடுவது உறுதி. பிறகு எப்படி மறுபடியும் விளையாட இங்கே வருகிறேன்? செத்த பிறகு நான் இல்லையே? வியர்வை ஓடையென உடலிலிருந்து ஓடி மண்ணை நனைத்துக்கொண்டிருந்தது. அதன் ஈரம் ஒருவித பதைபதைப்பை உடலுக்குத் தந்தது. சிறுநீர் கழிக்கும்போது உடலில் ஏற்படும் சிலிர்ப்பைப் போல உடல் சிலிர்த்தது.


மிருகத்தின் கோர கர்ஜினை என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். அடிவயிற்றில் போய் அதன் கர்ஜினை முட்டி நின்றது. குளிர்ஜுரம் கண்டவன் போல உடல் நடுங்க ஆரம்பித்திருந்தது. கண்களில் நீர் பெருக்கெடுத்தது. இவ்வளவு பயங்கரமானதா உயிரின் மீதான ஆசை. அது மட்டும் இல்லை என்றால், அதன் கூர்மையான முன் பற்களையும், சிவந்த எரியூட்டும் கண்களையும் சந்தித்துப் பேசியிருப்பேன். தப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே இப்போது புத்திக்குள் ஓடியது. மற்றதைப் பற்றிய கவலை இல்லை என்றே தோன்றிற்று.


திடுமென எழுந்து வலதுபுற வாயில்வழியாக ஓடி, அறையைச் சுற்றிக்கொண்டு முன் சுவரின் இடத்திற்கு வந்தேன். பயம் மட்டுமே என்னை வழிநடத்துவதாய் தோன்றிற்று. அந்த இரண்டு சாளரங்கள் இருப்பது நன்றாகத் தெரிந்தது. அதற்கு முன்னால் நூற்றுக்கணக்கானவர்கள் முட்டிக்கொண்டும் உள்ளே நடப்பதைப் பார்த்துக்கொண்டும், தனக்கு இணக்கமானவர்களுக்காக கத்தியவாறும் இருந்தனர். சுவரைச் சுற்றி ஓர் ஆள் அளவு சுற்றளவில், இடுப்பளவு மதில் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. மதிலின் மேல் மக்கள் திரள் கைகளை உயர்த்து சோக குரலில் வீரிட்டது. இவர்கள் பார்வையாளர்கள் போல் தெரிந்தாலும், அறைக்குள் நடக்கும் நிகழ்வில் ஏதோ ஒருவகையில் பங்கெடுத்தவர்களாய் தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தினர். நான் முண்டிக்கொண்டு ஆர்வத்தின் காரணமாக உள்ளே நுழைந்தேன். எனது உடல் மக்கள் திரளின் ஓர் அங்கமாக மாறிப்போனது.  மிருகம் உள்ளே போகாமல் என்னைப் போலவே சுற்றிக்கொண்டு வந்தால் என்ன செய்வது? தப்பிக்க வழியே இல்லையே என நினைத்துக்கொண்டிருக்கும் போது.


அப்படி நடப்பது இல்லை. இப்போது அதன் வழியை அடைத்துவிட்டார்கள். இங்கு வராது எனச் சொல்லி தன் சிரிப்பை வெளிப்படுத்தினான். அந்தக் குரல் சற்று முன் கேட்ட அதே குரல்தான் என எண்ணிக்கொண்டேன்.
அவன் தன் கைகளை முன்னால் நீட்டி என்னைச் சுவருக்கு பக்கத்தில் இருந்த மதில் சுவருக்கு மேலே தூக்கிவிட எத்தனித்தான். நான் நினைத்தது எப்படி இவனுக்குக் கேட்டது? நினைத்தேனா? சொன்னேனா? ஏன் நினைவுகள் இப்படி அலைகின்றன? சந்தேகத்துடன் கைகளை நீட்டினேன்.
கர்….ஆஆஆஆ……கர்…ஆஆ,…………….என கர்ஜனையும் , அலறலும் அறையின் உள்ளேயிருந்து கேட்டது. மனிதனின் உச்சக்கட்ட துக்கமான சத்தமது. தாங்கிக்கொள்ள முடியவில்லை.  கண்களில் நீர் வழிந்தோடியது.
கூட்டம் ஐய்யோ.. ஐய்யோ வென கத்தியது. ஈனமாகக் குரலில் சோகம் இழையோடியிருந்தது.


காப்பாத்துங்க…யாராவது..ஆஆஆஆ……..அம்மா….தாங்க முடியலையே..வலி,வலி… கர்…..கர்….கர்…… மயான அமைதி நிலவியது. கூட்டம் சத்தமிடுவதை மறந்து துக்கத்தில் ஆழ்ந்தது.
நான் அதற்குள் சுவரின் மீது ஏறிவிட்டேன் ஆனால் அறை தெரியவில்லை. அதற்காக நகர்ந்து முன்னால் சென்றேன். முன் நிற்பவர்கள் துக்கத்தில் இருந்ததால் அவர்களுக்குள் நுழைந்து முன்னேறினேன். சாளரத்திற்கு ஒரு அடிக்கு முன்னாலே போகவேண்டாமென நின்றுகொண்டனர். பச்சை நிற கம்பிகள் வைத்து , சற்று அதிகமான இடைவெளி இருந்தது, என்றாலும் அதனுடே மிருகம் வெளியே வரமுடியாதது சற்று திருப்தி அளித்தது. அடுத்த சாளரம் வழியே வந்துவிட்டால் என்ன பண்ணுவது? தலையைச் சாய்த்து அதனை எட்டிப்பார்த்தேன். கொரில்லா மிருகத்தின் தலை அதில் தெரிந்தது. அமைதியாய் இருந்தது. மக்கள் சற்று பயந்து பின்னால் ஓடினர். சிலைபோல அப்படியே கூட்டத்தைப் பார்த்து நின்றது.  வாட்டசாட்டமான வாலிபன் ஒருவன் அதன் பக்கத்தில் நகர்ந்தான்.


அதுக்கு பக்கத்தில போகாத..உனக்கு என்ன கிருக்கு பிடிச்சிறுக்கா என்ன? என கூட்டத்திலிருந்த ஒருவர். கூட்டத்தின் கேள்வியை கேட்டார்.
அட! சாளரம் எவ்வளவு சின்னதா இறுக்கு. அதனால் ஒண்ணும் பண்ண முடியாது என்று சொல்லிக்கொண்டு சுவரின் மீது கைகளை ஊன்றினான். மிருகம் கைகளை சாளரத்தின் வழியே நீட்டி அவன் முகத்தைத் தடவியது. பிறகு கை, கால்களைத் தடவியது. நீட்டியவாறே உள்ளே எடுத்துக்கொண்டது.
இப்போது கூட்டம் முண்டியடித்துக்கொண்டு சாளரத்தின் அருகே வந்தது. நமக்கெல்லாம் சாவு இல்ல, உள்ள இருக்கிறாகளே, அவங்களுக்குத்தா..ஆமா என்றவாறு தன் கையை நீட்டி அதன் மூக்கைத் தொட்டான். மற்றவர்களோடு அளாவிக்கொண்டு அந்த சாளரத்தைக் கடந்துவந்தது.


சுவரின் மீது கால்களை நன்றாகப் பதித்து கூட்டத்தைப் பின்னால் தள்ளினேன். அது கடிச்சி கொன்றுவிடும், பக்கத்தில் போகவேண்டாமென கத்தினேன். நான் கத்துவது யாருக்கும் கேட்டது போலத் தெரியவில்லை. சிலர் முண்டிக்கொண்டு சாளரத்தின் முன்னால் நின்றனர். பின்னால் நின்றவர்கள் என்னைத் தள்ளியவாறு கத்திக்கொண்டிருந்தனர். உடல் நடுங்க ஆரம்பித்தது. சாளரத்துக்குக் கீழே எனது கால்களை ஊன்றித் தள்ள முற்பட்டது அற்ப காரியம். கூட்டத்திற்கு முன்னால் தனி நபரின் பலம் கடுகளேவே. வலுக்கட்டாயமாகக் கூட்டம் என்னை அதனிடம் பிடித்துக்கொடுப்பதாய் தோன்றிற்று. கால்களையும், கைகளும் தான் அதற்கு அருகாமையில் பிடிப்பதற்கு ஏதுவாய் இருந்தது. சாளரத்தின் இடைவெளியில் அந்த கூர்மையானபற்க்கள் தெரிந்தது. உதடுகளைத் திறந்து மூடியது. கொடூரமான கண்கள் விளக்கு போல எரிந்தது. எப்படியும் அது என்னைத் தின்றுவிடுமென மனதிற்கு தெரிந்தது. தப்பித்துவிட வேண்டும், அப்படி நடக்காது எனவும் நினைத்தது. சாளரத்தில் நன்றாகத் தெரிந்தது மிருகம். கைகளைச் சாளரத்தின் வழி நீட்டியது.


அதிர்ந்துபோய் எழுந்தேன். இரவு விளக்கு சன்னமாக எரிந்துகொண்டிருந்தது. படுக்கை நனைந்து கிடந்தது. இருதயம் வேகமாகத் துடித்தது.

பிச்சைப் பாத்திரம்

  குறிப்பு : மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய மத்தவிலாச பிரகசனம் என்னும் அங்கத நாடகத்தை தழுவி எழுதப்பட்ட சிறுகதையிது. எழுத்தாளன் என்ற முறையில் கத...