Skip to main content

கலைஞன் - சிறுகதை

சர்மா வெற்றிலையை தன் வாயில் அடக்கவும் காதர் எங்கள் அறைக்குள் வரவும் சரியாக இருந்தது. இருந்த ஒரு படத்தையும் ஸ்டுடியோ முடித்துவிட்டதால், அடுத்த வேலைக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். உடனே வரும் என்று தோன்றவில்லை. ஒரு வகையில் சும்மா உக்காந்து சம்பளம் வாங்கிக்கொண்டு போகலாம்தான். ஆனால் அதுவே வருடக்கணக்கானால், சும்மா இருப்பதைப் போன்ற ஒரு சுமை வேறு இருக்காது. எங்கள் லன்ச் டைம் முடிந்ததும் தூக்கம் போடாமல் இருக்க எதாவது ஊர் வம்பு பேசிக்கொண்டிருப்போம், ஆனால் இந்த மே மாத வெயிலின் புளுக்கம் தாங்காமல் கையில் கிடைத்த அட்டையை விசிறியாக ஆட்டிக்கொண்டிருந்தோம். சர்மா இன்னும் தன் உடலை என்னவோ கன கச்சிதமாக வைத்திருந்தார் ஆனால் அவரது கிராக்கிதான் இப்போது கொஞ்சம் இறங்கித்தான் போனது. ஒவ்வொரு பத்தாண்டும் சினிமாவின் போக்கு மாறிக்கொண்டே இருக்கும் அதில் பழையது முழ்கி புதியது வெளியே வரும் என சாமிக்கண்ணு நேற்று லன்ச் டைம்மில் சர்மா பற்றிப் பேச்சு வந்த போது சொன்னார். எப்படி மறுபடியும் பழைய இடத்தைப் பிடிப்பது என்று எனக்கு நன்றாக தெரியும் என்பதைப் போல வெற்றிலையை மென்று கொண்டிருந்தார். 

ஒரு கால் குட்டையான நாற்க்காலியின் பின்புறத்தை பிடித்துக்கொண்டு நின்றான் காதர். முன்னால் எப்படி வந்து நின்றானோ அதே போல. ஆனால் அவனது உடல் மட்டும் குறுகிப்போய், பத்து வயது சிறுவன் போல இருந்தான். 

வெள்ளை சொன்னாங்க....சர்மாவைப் பார்த்து பேச வந்தவன் அப்படியே தலையை கீழே போட்டுவிட்டான். 

சர்மா புளுக்கம் தாங்கமல் தன் மேல் பட்டனை கழட்டிவிட்டு, வெற்றிலையின் கார்வையை போக்க ம்க்க்க்க்க்..என செறுமினார். 

காதர்..நிமிர்ந்து சர்மாவைப் பார்த்தான். இல்லைங்க...தலையை சொறிந்தான். நீங்க தேடறது தெரிஞ்ச நா ஓடிவந்துருப்பங்க.. குற்றம் செய்தவன் போல கைகளை கட்டிக்கொண்டு நின்றான்.

இப்ப எனக்கே வேலை இல்ல நா ஒன்னும் பண்ண முடியாதுப்பா....

சார்..நீங்கலே இப்படிச் சொன்ன என்ன பண்ண முடியும்ங்க.....வாயில் கையை வைத்து கேவ ஆரம்பித்தான் காதர். ஒரு பிள்ளை நாலு மாசத்துக்கு முந்தி செத்துப் போச்சுங்க.பொண்டாட்டி என்ன வீட்டுக்குப் போன கொலகாரன்னு சொல்லி திட்டறா...குலுங்கி குலுங்கி அழுகிறான்.

சர்மா என்ன சொல்வதேன தெரியாமல் அவனை பார்த்துக்கொண்டு இருந்தார். 

பிள்ளைக சாப்பிட்டு ஒரு வாரமாகுந்துங்க...என்ன பண்றதுன்னு தெரிலைங்க.காதர் திரும்பி எங்களைப் பார்த்தான். பிறகு தன்னை தேற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தான். அவனது உடல் முழுக்க வியர்வை வழிந்துகொண்டிருந்தது. உங்க கம்பனில எதாவது வேல இருந்த போட்டுக்கொடுங்க சார்...

எங்களுக்கே வேல இல்லையேப்பா!! உனக்கு எப்படி வேல குடுக்கறது? சர்மா கோவப்படுவார் என நினைத்தேன். எவ்வளவு கஷ்டப்பட்டு அவர் கதை இலக்காவில் பேசி டைகர் ஃபைட்க்கு மற்றவர்களை சம்மதிக்க வைத்தார்? ஆனால் அந்த ரோலைச் செய்ய காதர்தான் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவரே வெள்ளையை அழைத்துக்கொண்டு போய் தேடி அலைந்தார். கடைசிவரை கிடைக்காமல் போனது அவருக்கு பயங்கர கோவத்தை வரவைத்தது. ரோல் கேக்கரானுக, கஷ்டப்பட்டு வாங்கிக்கொடுத்தா ஆளப் பிடிக்க முடியறது இல்ல. இனி யாரவது வரட்டும்? என கோவமாக திட்டுகொண்டிருந்தார் கடைசி கட்ட படப்பிடிப்பு சமயத்தில். அதில் துளி கோவம் கூட இல்லாமல் இப்போது காதரிடம் பேசுவது சற்று ஆச்சரியம்தான். 

எனக்கு ரோல்ன்னு எதுவும் வேணாங்க..என்ன வேலைன்னாலும் செய்யற என்றான் காதர். 

சர்மா யோசித்தார். காதுகளை நீவிவிடுவது அவரது பழக்கம். நா பாத்துட்டு சொலற..

நீங்க பாத்து எதாவது செஞ்சாத்தா உண்டு சார் என அவன் மறுபடியும் கேவினான்.

நா வேல பாத்து வைப்ப, நீ எங்காவது ஓடிப்போயிருவ இல்ல என கோவமாகக் கேட்டார். 

இல்ல சார் டேய்லி இங்க வந்து உங்கள பாத்துட்டுதா வேற எங்காவது போறதுன்னா போவ என தன் உடலைக் குறுக்கிகொண்டு கண்களை துடைத்தான் காதர்.

ம்.....ஒரு வாரங் கழிச்சு வா! நா வேற பக்கம் பேசிட்டு சொல்றம்ப்பா!! 

வேற பக்கங்களா? 

ஏ வேற பக்கம் போகமாண்டயா? ஏய்யா? இங்க எங்களுக்கே வேல இல்லைங்கற.. சர்மா கோவப்பட்டால் சற்று முன் நகர்ந்து கைகளை உயர்த்திப் பேசுவார். 

இல்லைங்க...இங்கயே வேல செஞ்ச, நீங்க படம் எடுக்கறப்ப ரோல் தருவீங்க...வேற பக்கம்ன்னா அப்படி முடியாதுங்க...

எல்லோரும் காதரையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

நா வேற வேல செய்யறதுன்னு சொன்னதே, ரோல் கிடைக்கும்கிறதுக்காகத்தா என்றான் காதர். 

உனக்கு அறிவு இருக்காயா? புள்ள குட்டிக சோறு இல்லாம கிடக்குது உனக்கு ரோல்தா முக்கியமா? சர்மாவின் கோபம் உச்சத்துக்கு வந்துவிட்டது.  காதர் தலையை தொங்கப்போட்டுக்கொண்டான்,

அப்புறம் பொண்டாட்டி திட்டாம என்ன செய்வா? சொல்லுய்யா? தனது பாக்கெட்டில் கையைவிட்டார் சர்மா.

ஐய்யோ வேணாமுங்க!! எனக்கு வேலமட்டும் இங்க போட்டுகுடுங்க அது போதும் சார் என்றான் காதர்.

சில்லறைகளை எடுத்து மேஜை மேல் வைத்தார். எங்களிடம் இருந்தது எல்லாம் சேர்த்து நாலு ரூபாய் தேறியது. போ!! போயி கேன்டில்ல சாப்பிடு..ஒரு வாரம் கழிச்சு வா..நா என்னால் என்ன முடியுமோ பாக்கற என்றார் சர்மா.

காசை வாங்கிக்கொள்ளவில்லை என்றால் சர்மா கோவப்படுவார் என நினைத்து அதை வாங்கிக்கொண்டான். எல்லோருக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வெளியேறினான். 

சரியாக அடுத்த வியாழக்கிழமை எங்கள் காரியாலையத்துக்கு வந்தான், அன்று சர்மா அவரது நெருங்கிய உறவினர் சாவுக்குச் சென்றிருந்தார். காதர் அவரது இருக்கை காலியாக இருந்ததால் ஏமாற்றம் அடைந்தான். சரிங்க...நா வந்தேன்னு சாருகிட்டச் சொல்லுங்க..அடுத்த வாரம் வந்து பாக்கறேன்னுங்க எனச் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.  

எல்லோரும் காதரை கிட்டத்தட்ட மறந்துவிட்டோம் என நினைக்கின்ற தருணம் வெள்ளை வந்தான். அன்று காலை மணி பதினொன்று இருக்கும். சர்மா வெள்ளையைப் பார்த்து என்னய்யா இன்னும் பட ஆரம்பிக்கலையே என்றார்.

வெள்ளை எப்போதும் குழைக்கும்பிடு போட்டுவிட்டு, கள்ளச் சிரிப்பு சிரிப்பான். ஆனால் இன்று அப்படி எல்லாம் இல்லாமல் அவனது முகம் இருகிப்போயிருந்தது. சர்மா அப்போதுதான் அவனது முகத்தை கவனித்தார்.

வெள்ளை எப்போதும் ஒரு கால் குட்டையான நாற்க்காலிக்கு இரண்டடி தள்ளி நின்றுதான் பேசுவான். சார்..டைகர் ஃபைட் காதர் மண் லாரில அடிபட்டு செத்துப்போயிட்டானுங்க என்றான். 

எங்கள் எல்லோருக்கும் அது அதிர்ச்சியாக இருந்து. சர்மா அவனைப் பார்த்து, எப்பய்யா? என்றார்.

நேத்துதானுங்க...இங்க அவ வரம்போது அப்படி ஆயிடுச்சுங்க..என்றான். சர்மா கண்கள் கலங்கிப்போய்விட்டது. இப்படி ஆயிபோயிருச்சேய்யா? எங்கள் எல்லோரையும் ஒருமுறை திரும்பிப் பார்த்தார். அவ குடும்ப இப்ப நடுத்தெருவுல நிக்குதுங்க சார் என்றார் வெள்ளை.

நா என்னய்யா பண்ணறது என்றார் சர்மா? 

வெள்ளை ஜாபர் என அழைத்ததும், அதுவரை எங்கள் அறைக்கு வெளியே நின்றிருந்த பனிரண்டு வயது பையன் ஓடி வந்து வெள்ளை பக்கத்தில் நின்றான். நாங்கள் அந்த சிறுவனை ஆச்சரியத்தோடும் அதிர்ச்சியோடும் பார்த்தோம்.

காதரோட பெரிய பைன்ங்க...ஜாபர் கும்பிட்டுக்கொண்டான். இப்ப நா என்ன பண்ணனும்ப்பா என்றார் சர்மா.

எனக்கு எதாவது ரோல் இருந்த குடுங்க என்றான் அந்த சிறுவன்.

ரோலா? உனக்கு என்ன ரோல் தற்றது? அதுமட்டும் இல்ல இங்க இப்ப படம் எடுக்கலையே? வெள்ளை உனக்கு தெரியாதா என்ன? எதுக்கு கூட்டிட்டு வந்த?

எனக்கு டகர் ஃபைட் தெரியும்ங்க...நீங்க பாக்கறீங்கலா எனச் சொல்லிக்கொண்டு, துணிப்பையிலிருந்து காதரின் அதே முகமூடியை எடுத்தான் ஜாபர். 

பின்குறிப்பு: அசோகமித்திரன் அவர்கள் எழுதிய புலிக்கலைஞன் என்னும் சிறுகதையின் தொடர்ச்சி. புதிய முயற்ச்சி. 

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

அமுதம்

  இது என்னில் மிக பாதிப்படைய வைத்த கதை. இதைப் பற்றி எழுத அல்லது தொகுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் கதை பல தளங்களில் விரிந்து செல்கிறது. முதல் தளம் மற்றும் எனக்கு முக்கியமான தளம் என்பது காமம் சார்ந்தது. அன்னை ஒரு பக்கம் என்றால் மனைவி மறுபக்கம். இருவருக்கும் இடையில் இருக்கும் புள்ளி காமம் இல்லாத பூஞ்யம் என கொள்வோம். மனைவி பக்கம் வரவர காமத்தின் அளவு ஏறிக்கொண்டே போகிறது. மறு எல்லையில் அது கருணையாக/அன்பாக/பாசமாக ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக யோசித்துப்பார்த்தால் அடிநாதம் காமம்தான். மனைவி அன்னையாகும் தருணம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணின் மனம் குழம்பும். இவளை எந்த இடத்தில் வைப்பது? அன்னையின் பக்கமா இல்லை மனைவியின் பக்கமா? எல்லா ஆண்களிடமும் இருக்கும் இந்த பிரச்சனை. ஒருவேளை அன்னைக்கும் மனைவிக்குமான மனப்போரட்டமாகவே ஆணின் வாழ்க்கை முழுவதும் இருக்கும்(காமத்தைச் பொருத்தவரை). இரண்டாவது தளம் நேர்மறையான செயல்களை செய்பவர்கள் மேலான சந்தேகம். சாதாரண மனிதர்களுக்கு இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனித மனம்  எளிதாக எதிர்மறையான விசயங்களை நோக்கி செல்லும். கருணை, தன்னை சமூகத்துக்காக சமர்பித்தல் போ

கழுமாடன் - அறம் கடவுளுக்கும் மேல் அல்லவா? (ஜெயமோகன் சிறுகதை)

  கழுமாடன் கதையும் பீடம் கதையும் ஒருவகையில் ஒடுக்கப்பட்டவர்கள் தெய்வமாவதுதான். தன்னுடைய கோபம், வடுக்களுடன் ஒருவன் இறந்துபோனால் அது அப்படியே அழிந்து போகாது. மனித உடல் மக்கிவிடும் ஆனால் அவனது எண்ணங்கள் அழியாது மாடனாக வந்து ரத்தம் கேட்க்கும். தன் அதிகார பலத்தால் மிரட்டி பணிய வைக்க முயலுகிறாள் உயர் குடி பெண். அதற்க்கு இணங்கவில்லை என்றால் நாயகனின் அம்மாவை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறாள். வேறு வழியில்லாமல் அவனும் ஒத்துக்கொள்கிறான். இருவரும் மாட்டிகொள்ளும் போது, அவள் கைப் பிடித்துவிட்டாதாகச் சொல்லி தப்பிக்கப்பார்க்கிறாள். நாயகனுக்கு கழுவேற்றம் தண்டனையாகிறது.  கதையில் இரண்டு அதிர்ச்சியுறும் இடம் வருகிறது. ஒன்று அந்த கழுவேற்றும் ஒத்திகை மற்றது நாயகன் குருவனிடம் தான் அவளைத் தொடவில்லை ஆனாலும் கழுவேறுகிறேன் என்கிறான். இதில் இரண்டாவது சம்பவம்தான் பெரும் அதிர்ச்சி அடையவைக்கிறது. செய்யாத குற்றத்திற்க்காக அவன் கழுவேற்றம் அடைகிறான். காரணம் அவன் புலையன்.  அந்த இழிநிலை தாங்காமல் அவன் மாடனாகி ரத்த பழி வாங்கத் துடிக்கிறான். பீடம் கதையில் வரும் மாடன் அவன். அவன் கேட்ப்பது ரத்தமில்லை, அறம். அறம் கடவுளுக்கும் மேல