Pages

Tuesday, September 6, 2016

நான் என்ன செய்யட்டும்?

பஸ் சாவுகாசமாய் நின்றுகொண்டிருந்தது. முன்படியிலிருந்து நான்காவது சன்னலோர சீட் கிடைத்த மகிழ்ச்சியில் அமர்ந்திருந்தேன். எனக்கு இடதுபக்க வரிசையிலிருந்த சீட்டின் முதுகு உடைந்து கூனிப்போயிருந்தது. மழை பஸ் முழுவதையும் குளிப்பாட்டி, சுத்தப்படுத்தியது. கண்ணாடி ஜன்னலை மேலே தூக்கிவிடும் ஸ்டைல் எனக்கு ஏனோ பிடிக்காது. வேறு வழியில்லாமல் ஜன்னலை மேலே தூக்கி அதன் லாக்கை விடுவித்தேன். ஒரு புறம் மட்டும்தான் லாக் நின்றது. காற்று மெதுவாக என் சட்டைக்குள் புகுந்து குளிர் ஊட்டியது.  அனுமதிக்கிறவரை காத்திருக்கிற நாகரிகம் அதற்க்கு  தெரிந்திருக்கிறது போல, சட்டென எனக்குள் சிரித்துக்கொண்டேன். வயதான தாத்தா, இளம் தம்பதி, குழந்தையோடு ஒரு பெண், சிறுவன் என வரிசையாய் பஸ்ஸில் ஏறிக்கொண்டிருந்தனர். சர சர வென சத்தம் கேட்டு தலையை திருப்பி வெளியே பார்த்தேன். இந்த காற்று மரங்களை ஆட்டி அதன் இலைகளை தற்க்கொலை செய்ய வைத்தது. அடுத்த கணம் விழுகின்ற  இலைகளை தாங்கி, தொட்டிலாட்டி தரையில் தள்ளியது. கிழிருந்து எழுந்து மலருக்குள் போய் உட்கார்ந்து மலர்படுக்கையில் துயில்கலைந்து, என் நாசியில் புகுந்து, நான் ஆன பிறகு பிரிந்து வேறானது. பண்டமாற்று செய்ய வேண்டுமென்றால் என் மனதைதான் காற்றுக்கு மாற்றாக இந்த நிமிடத்தில் தர முடியும். ஆனந்தத்தில் கூத்தாடியது. அமைதியானது.
மெதுவாக எனக்கு இருபுறங்களிலும் இருக்கிற வானுயர்ந்த மரங்கள் ஓடத் தொடங்கியது. கூன் விழுந்த சீட் மட்டும் காலியாக கிடந்தது. மேகங்கள் ஆசிர்வாதமாக சில மழைத்துளிகளை என் கைகளில் கொட்டியது. வெளியே தலையை விட்டு எட்டிப்பார்த்தேன், உயர்ந்த மரங்கள் மேகங்களுக்குள் சென்று தீர்ந்தங்களை தெளித்தது போல தோன்றிற்று. காற்று தொடர்ந்து என்னை குளிரூட்டும் வேலையில் முழ்கிப்போயிருந்தது. என் கையை ஜன்னலின் இரும்புக் கம்பியில் கெட்டியாக பிடித்து, மனம் நழுவி விழுந்துவிடாமல் பார்த்துக்கொண்டேன்.
யூக்கப்லட்டிஸ் மரத்திலிருந்து வரும் வாசனை மனதை கிளர்ச்சியுற செய்தது. கொல்லிக்கட்டை போல அணைந்து கொண்டிருக்கின்ற சூரியன் மரங்களின் இடைவெளியில் ஒளிந்து விளையாடினான். பஸ் மூங்கில், சவுக்கு மரங்களின் நிழல்கள் மேலே ஏறிக்கொண்டிருந்தது. பஸ்ஸின் நிழல் அம்மரத்தின் அடிப்பகுதியை வெட்டிக்கொண்டே போனதை கூன் விழுந்த சீட் ஜன்னலின் வழியே தெரிந்தது. கொக்குகள் போருக்கு ஆயுத்தமாகி வரிசையில் அணிவகுத்துச் சென்றது. நானும் பொறுத்து பார்த்தேன் அணிவகுப்பு முடிவதாய் தெரியவில்லை. தலையை வெளியே நீட்டியும், எதிர்புற ஜன்னல் வழியே பார்த்தும் கண்டடைய முடியவில்லை, சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பார்த்த போதுதான் தெரிந்தது, முழுநிலவிலிருந்து ஒவ்வொன்றாய் அனுப்பப்படுவது. கொக்குகளின் வியூகம் மலைக்கும்படி தோன்றிற்று. படைத்தளபதி யாரென்று கண்டுபிடிக்க கூடாது என்று மாறி மாறி ஒவ்வொரு கொக்கும் படைக்கு தலைமை தாங்கிச் சென்றது. நிச்சயமாக இவைகள் கட்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் சூரியனை மீட்டுவிடும். அதற்க்குள் நீண்ட மரங்கள் எல்லாம் ஓடி புல்வெளிப் பரப்பு வந்திருந்தது. தூரத்தில் தெரிந்த மலைகள் வெய்யிலின் கொடுமை தாளாது அணிந்துகொண்ட மேக குல்லாவை இன்னும் கலட்டாமல் வைத்திருந்தது. பூமி, வானத்தைப் பார்த்து காமத்தால் பொங்கும் போது சில சமயம், வானத்தை தழுவும் உயர்ந்த மரமாகவும், மறு சமயம் பூமியை ஒட்டி நிற்க்கும் புல்லாகவும் பொங்குவது அதன் காமத்தைப் பொறுத்தது. சிறிது நேரம் புல்வெளிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தேன். பணைத்தோள் வில்போல் வளைந்து, இருகரங்கள் அம்பாய் வானத்தைப் பார்த்திருந்தது. அவள் முதுகினில் கார்கூந்தல் துயிலூரங்கியது. புல் ஆசனத்தில் வீற்றிருந்தாள். தோளின் இருபுறமும் சரடு ஒன்று முன்னழகையும், பின்னழைகையும் மறைக்கும் திரையை இணைத்திருந்தது. அந்த சரடு துலாத்தட்டைப் போல முன்னழகையும், பின்னழைகையும் எடை போட்டது. பின்னழகு  மிகுந்து அதன் திரை சற்றே கிழிறங்கியது அதன் வழியே அவள் அழகு வழிந்தோடியது. என் கண்கள் அவற்றை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் தின்றது. நொடிப்பொழுதில் மறைந்து போனாள். திரும்பவும் சில நொடிகளில் என்னுள்ளே எழுந்தாள். மனதில் எண்ணங்களைக் கூட்டி கூட்டி பெரும் கற்குவியல் போல எனக்கு தெரியாமல் அடுக்கிவிட்டேன். சட்டென விழித்ததும் எடையின் வலி தாளாது துன்பத்தை முளைக்கவிட்டது. துன்பம். துன்பம் என்று மனம உழன்றாலும், வேண்டாம், வேண்டாம் என்று ஊமை மனம் கத்தினாலும், யானையைச் சுத்தும் உண்ணியைப் போல அவளது எண்ணங்கள் என்னைச் சுற்றி வந்தது. காற்றின் குளிர்ச்சியும், பூமியின் காமத்தையும், சூரியனையும், சந்திரனையும், எனது காமம் வென்று அதனை சாதாரண பொருளாக மாற்றியது. அவைகள் அற்பமானவைகளாக தோன்றிற்று. இரசிப்பதற்க்கு அவளைத்தவிர வேறு எதுவும் இல்லை என்றே நினைத்தேன். புல்வெளிகளின் நடுவே வேப்ப மரத்தின் அடியில் உடுக்கை அடித்துக்கொண்டு ஒரு கூட்டம் சாமியாடியது. உடுக்கையின் அதிர்வு என் மனதை பிரட்டிப்போட்டது. பெண்னோருத்தி நெற்றியேங்கும் திருநீரு பூசி கழுத்தில் மாலையிட்டு ஆடிக்கொண்டிருந்தாள். கிழவன் ஒருவன் இடுப்பில் துண்டைக்கட்டியவாறு பாடிக்கொண்டிருந்தான்.  உடுக்கையின் அதிர்வு மிக அருகே வந்ததும்,  அந்த இடமே ஒரு அதிர்வுக்கு உள்ளானது போல தோன்றிற்று. மனம் வழுவி, வெறிகொண்டு, நழுவி சுயநிலைக்கு வருவதற்க்குள் அந்த காட்சி வெகு தூரத்தில் விலகியது. எல்லை அம்மன் அவள்.
புல்வெளிகள் சிறு சிறு கட்டிடங்களாய் அங்கொன்றும், இங்கொன்றும் முளைத்திருந்தது. புல்வெளிக்கு நடுவே யார் விதை போட்டு வளர்த்திருப்பார்கள் என்று தோன்றிற்று. பொங்கும் காமத்தை காங்கீரிட் போட்டு மறைத்தவர்கள் அவர்கள், நிச்சயம் பூமியின் கோபத்திற்க்கு ஆளாவார்கள். அதற்க்குள்ளாகவே புல்வெளிகள் குறைந்து கட்டிடம் ஒன்றை ஒன்று நெருங்கிக்கொண்டிருந்தது. பின்பு மெதுவாக வளரத்தொடங்கியது. காட்சிகள் தொடர்ந்து மாறிய வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் காட்சிகள் பிரேக் போட்டு நின்றுகொண்டது. வண்டிகள் முந்திச் செல்ல எத்தனித்து தோற்று நின்றன. காற்று சூடாகி எறிந்தது. ஜன்னலின் லாக்கை விடுவித்து மூடினேன். வேண்டாம் என்றாலும் கண்ணாடி வழியே அந்த காட்சி தெரிந்தது. பச்சை நிற விளக்குக்கு பல கால்கள் தவமிருந்தன பிரேக்கிலும், எக்ஸ்லேட்டரிலும்.  ஒருவழியாய் நான் இறங்கவேண்டிய இடம் வந்தது, இறங்கிக்கொண்டேன். பஸ் கருப்பு நிற புகையை கக்கியவாறு நகர்ந்தது. பர்ஸையும், தோள் பேக்கும் இருக்கிறதா என சோதனை இட்டுக்கொண்டேன். டம். . என்ற சத்தம் கிட்டத்தட்ட என் சப்த்த நாடிகளையும் ஒடுங்கிவிடச் செய்தது. ஆ. . என்று தொடர்ந்து இனக்குரலில் கத்தும் சத்தம். கிட்டத்தட்ட உறைந்தேவிட்டேன். கீழே விழுந்த பைக்காரன், தன் பொண்டாட்டியைப் பார்த்து கத்திக்கொண்டிருந்தான். சாலையில் பைக்கிலும், காரிலும் போவோர் அவனை சுற்றிக்கொண்டும், நிற்க்காமலூம் சென்றனர். கீழே விழுந்தவனைப் பார்ப்பதும், கைக் கடிகாரத்தைப் பார்ப்பதுமாய் கூட்டம் நகர்ந்துகொண்டிருந்தது. அவன் போவோரைப் பார்த்துக் கதறினான். எந்தவித எதிர்வினையும் இல்லை. அவள் இறந்துவிட்டாள் என நினைக்கிறேன். நான் என்ன செய்யட்டும்?   விழுந்தவர்களை காப்பாற்றலாமா? வந்த பஸ்ஸை வேர காணோம்.பஸ் வந்தால் திரும்பிவிடலாம். யாருமே காப்பாற்றபோது நமக்குமட்டுமென்ன? ஆனால் பாவம் தானே. நான் என்ன செய்யட்டும்?


No comments:

Post a Comment